வாசிப்பு
"தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவாகிலும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது." ( 1 யோவான் 1:5 )
ஓராண்டில் வேதாகமம்
கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத்தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான். அப்போஸ்தலர் 20:1 அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்திசொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். அப்போஸ்தலர் 20:2 அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியாதேசத்துக்குப் போகமனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனைகொண்டிருந்தபடியால், மக்கெதொனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். அப்போஸ்தலர் 20:3 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியாநாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள். அப்போஸ்தலர் 20:4 இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். அப்போஸ்தலர் 20:5 புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஜந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். அப்போஸ்தலர் 20:6 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 20:7 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. அப்போஸ்தலர் 20:8 அப்பொழுது ஜத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். அப்போஸ்தலர் 20:9 உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக் கொண்டு; கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். அப்போஸ்தலர் 20:10 பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப்புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். அப்போஸ்தலர் 20:11 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள். அப்போஸ்தலர் 20:12 பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப்பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம். அப்போஸ்தலர் 20:13 அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம். அப்போஸ்தலர் 20:14 அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து, அப்போஸ்தலர் 20:15 பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துப் பட்டணத்துக்குப் வந்தோம். அப்போஸ்தலர் 20:16
மனப்பாட வசனம்
"தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவாகிலும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது." ( 1 யோவான் 1:5 )
இன்றைய தியானம்
ஆதியிலே, சூரியன், சந்திரன் அல்லது நட்சத்திரங்கள் விண்வெளியில் தோன்றுவதற்கு முன்பே, தேவன்: "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று கட்டளையிட்டார். ஒளிரும் விண்சுடர்கள் ஏதுமின்றி வெளிச்சம் எவ்வாறு தோன்றியது என்பதை மனித அறிவால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இந்த ஆதி ஒளி நேரடியாக சிருஷ்கரிடமிருந்தே வந்தது என்பதே நாம் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வீக உண்மை. அவரே இந்த உலகத்திற்கும், பிரபஞ்சத்திற்கும், அனைத்து விண்மீன் திரள்களுக்கும் (Galaxies) உண்மையான ஒளியாக இருக்கிறார்.
பௌதிக அறிவியலின்படி இருள் என்பது தனித்துவமான ஒரு தன்மை அல்ல, அது ஒளியில்லாத ஒரு நிலையையே குறிப்பிடும். அதேபோல, ஆன்மீக இருளும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றல்ல. தேவன் இருளைப் படைக்கவில்லை; ஒளி தன்னை விலக்கிக்கொள்வதாலே தான் இருள் உண்டாகிறது. சாத்தான் இந்த இருண்ட வெற்றிடத்தை விரும்புகிறான். நம் இருதயங்களில் இருந்து தேவனுடைய மகிமையை மறைக்க அவன் பாவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான். பாவம் நம் வாழ்க்கையில் நுழையும் போது, அது தேவனுடைய பிரசன்னத்தை மறைத்து, ஆத்துமாவை இருளுக்குள் தள்ளுகிறது. இந்த அந்தகார இருள் என்பது ஏதோ ஒரு சக்தி வாய்ந்த நிலை அல்ல, மாறாக நாம் தேவனுடைய ஒளியின் பிரகாசமான எல்லையை விட்டு வெளியேறும் போது ஏற்படும் ஆன்மீக வறுமையே இந்த அந்தகார பாவ இருள் ஆகும். ஒரு தடிமனான திரை பிரகாசமான சூரிய ஒளியை மறைப்பது போல, நாம் செய்யும் பாவம் தேவனுடைய பரிசுத்த ஒளிக்கதிர்களை நமக்கு நேராக வராதபடி தடுக்கிறது. பிசாசினால் சொந்தமாக ஒளியை தானே உருவாக்க முடியாது, எனவே மனிதனை பாவத்தில் தள்ளி அந்த பாவம் என்னும் சுவரால் தேவனை விட்டு பிரிந்து போய்விட வேண்டும் என்பதே அவனது தந்திரமான திட்டமாகும். பாவம் என்னும் சுவர் எழும்பும்போது, ஆத்துமா இயற்கையாகவே குளிர்ந்து, குருடாகி, திசைமாறிப்போகிறது. எனவே, நம் உள்ளத்தின் இருளை வெல்வது என்பது இருளோடு போராடுவது அல்ல; மாறாக பாவம் என்னும் பிசாசின் தடையை அகற்றி, தேவனுடைய ஒளியை மீண்டும் நம் இருதயத்திற்குள் ஊடுருவ அனுமதிப்பதே ஆகும்.
இன்றைய மேற்கோள்
"இருளினால் இருளை விரட்ட முடியாது, ஒளியினால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பினால் வெறுப்பை விரட்ட முடியாது, அன்பினால் மட்டுமே அதைச் செய்ய முடியும்." - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
பரிந்துரைக்கப்படும் புத்தகம்
தேவனைத் தேடுதல் (The Pursuit of God)
by ஏ.டபிள்யூ. டோசர்
"_"
— _
Read More
ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் பிரபஞ்சத்தின் ஆதி ஒளியாய் இருக்கிறீர். எங்கள் வாழ்வில் காணப்படும் இருள் என்பது உமது ஒளியை நாங்கள் தடுத்த இடமே என்பதை உணருகிறோம். எங்கள் ஆத்துமாவில் நிழலை உருவாக்கும் ஒவ்வொரு பாவத்தின் தடைகளையும் தயவாய் தகர்த்தெறியும். உமது தெய்வீக வல்லமையால் எங்களை பலப்படுத்தி, உமது பிரசன்னத்தில் எங்களை நிலைநிறுத்தும். உமது ஒளியை பிரதிபலிக்கும் பரிசுத்த பாத்திரங்களாக எங்களை மாற்றும். ஆமென்.
உங்களுக்கு ஒரு வார்த்தை
உங்களைச் சுற்றியுள்ள இருளையோ அல்லது ஆன்மீகப் போராட்டங்களையோ கண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. இருளுக்கு என்று தனிப்பட்ட சக்தி எதுவுமே இல்லை, அது ஒளியின் விலகலே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று உங்கள் ஆத்துமாவை தேவனுடைய வல்லமையோடு இணைத்துக்கொள்ளும்போது, எல்லா இருளும் விலகியோடி தேவனுடைய பூரண கிருபையின வெளிச்சம் நிச்சயமாகவே உங்களுக்குள் பிரகாசிக்கும்.