மிகவும் அவசியமான "ஒரே ஒரு காரியம்"

மனப்பாட வசனம்

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் (லூக்கா 10:42)

இன்றைய தியானம்

லூக்கா பத்தாம் அதிகாரத்தில், இயேசு மார்த்தாள் மற்றும் மரியாள் வீட்டுக்குச் செல்கிறார். மார்த்தாள் உணவு சமைப்பதிலும் வீட்டு வேலைகளிலுமே அதிக மும்முரமாக இருக்கிறாள்; மரியாள் தனக்கு உதவவில்லையே என்று மிகுந்த கவலைப்படுகிறாள். ஆனால் இயேசு அவளிடம், "தேவையானது ஒன்றே உண்டு; மரியாள் தனக்கேற்ற நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படுவதில்லை" என்று கூறுகிறார். மார்த்தாள் செய்தது நல்ல காரியம்தான்; உண்மையில் அவள் ஆண்டவருக்கே ஊழியம் செய்துகொண்டிருந்தாள். ஆனால், இயேசுவுக்கு முதன்மையானதாக நம்மிடம் என்ன வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். தனக்கு ஊழியம் செய்வதை விடவும் அதிகமாக, அவர் நம்முடன் ஒரு அன்பான உறவைக் கொண்டிருக்க விரும்புகிறார்.
அந்த "ஒரே ஒரு காரியம்" என்ன? இயேசு என்று பலர் நினைக்கலாம். ஆனால் அதுமட்டுமல்ல, அது இயேசுவுடன் நெருக்கமாக வளர்ந்துவரும்
அன்பானதொரு ஐக்கியம். இயேசுவுக்கு ஊழியம் செய்வதை மார்த்தாள் அந்த " தேவையான ஒரே ஒரு காரியம்" என்று கருதியிருக்கலாம். ஆனால், மரியாளோ
"தேவையான அந்த ஒரே ஒரு காரியத்தை" நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். இயேசுவுடன் நாம் கொள்ளும் "தேவையான ஒரே ஒரு காரியம்" என்ற தெய்வீக உறவு, மனிதர்களுக்கிடையேயானதொரு மெய்யான நட்புறவைப் போன்றது. ஒருவரையொருவர் மதிப்பது, பழகுவது, ஒருவருக்கொருவர் நேரத்தை உபயோகமாக செலவிடுவது, மகிழ்வது, ஐக்கியமாக இருப்பது, அன்பு மற்றும் பற்றுறுதியுடனான ஒரு பிணைப்பை உருவாக்குவது போன்ற இயல்பான வழிகள்தான் இயேசுவுடன் நம் உறவு எப்படி வளர வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
(hands - on BiBle-ல் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)

இன்றைய மேற்கோள்

"அவருக்கு ஊழியம் செய்வதை விடவும் அதிகமாக, அவர் நம்முடன் ஒரு அன்பான உறவைக் கொண்டிருக்க விரும்புகிறார்."

பரிந்துரைக்கப்படும் புத்தகம்

ஹேண்ட்ஸ்-ஆன் பைபிள் (Hands-On Bible )

by Tyndale House Publishers

"_"

— _
Read More

ஜெபம்

அன்புள்ள ஆண்டவரே, நற்காரியங்களையும் ஊழியங்களையும் செய்யும் மும்முரத்தில் நாங்கள் தீவிரப்பட்டு, உமது பாதடியில் அமைதியாக அமர மறந்துவிடுவதற்காக எங்களை மன்னியும். மற்ற எல்லாவற்றையும் விட உம்மோடு உள்ள எங்கள் நட்புறவை நாங்கள் உயர்வாக மதிக்க எங்களுக்கு உதவும். நாளுக்கு நாள் ஆழமாகவும் பலமாகவும் வளரும் உம்மோடு கூடிய ஒரு அன்பான உறவை ஒவ்வொரு நாளும் பேணிக்காப்பது எப்படி என்று எங்களுக்குக் கற்றுக்கொடுப்பீராக. ஆமென்.

உங்களுக்கு ஒரு வார்த்தை

தேவனுக்காக எதாவது ஒரு கிரியை செய்வது என்பது கர்த்தருடன் நேரத்தைச் செலவிடுவதற்குச் சமம் என்ற மாயவலையில் விழுவது மிகவும் எளிது. இன்றே உங்கள் பிஸியான அலுவல்களை விட்டு சற்று விலகி, அவருடைய பிரசன்னத்தில் அமைதியாக அமர்ந்து, உங்களது மிக உயர்ந்த அழைப்பு அவருடைய நட்புறவில் தரித்து இருப்பது மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆசிரியர்

Pr. Maria Joseph

919243183231