இயேசு கிறிஸ்து ஒரு தேற்றரவாளன். அவர் பரிசுத்த ஆவியாகிய இன்னொரு தேற்றரவாளனை நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். ஆவியானவரைக்குறித்து பல அடையாளங்கள் வேதத்தில் காணப்படுகிறது. அந்த அடையாளங்களைத் தியானித்துப் பார்க்கும்போது அது ஆவியானவரைக்குறித்து அதிகமாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்ளுவதற்கும், அவரோடு நெருங்கி உன்னதமான உறவு வைத்துக்கொள்ளுவதற்கும் உதவியாய் இருக்கிறது.
அப். பவுல், கிறிஸ்துவைக்குறித்து அதிகமாக அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்பினார். இயேசுகிறிஸ்துவைக்குறித்து அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றார் (பிலி. 3:8). அவருடைய வாழ்நாளின் முழு குறிக்கோளுமே கிறிஸ்துவைக்குறித்து அறிந்துகொள்ளுவதாய் இருந்தது.
திரித்துவத்திலே அதிகமாய் அறியப்படாதவராய் விளங்குகிறவர் ஆவியானவர். சிலர் அவரைத் திரித்துவத்திலே மறைந்து நிற்கும் நபராக எண்ணுகிறார்கள். அவர் தன்னைப்பற்றி பேசுவதற்கு தயங்குகிறபடியினாலும், எப்பொழுதும் பிதாவையும், குமாரனையும் மகிமைப்படுத்துவதினாலும் வேதபண்டிதர்கள் அவரை அவ்விதமாய் எண்ணுகிறார்கள். அதே நேரம், வேதாகமத்தை வாசித்து தியானித்தால், பரிசுத்த ஆவியானவருக்கான அடையாளங்களின் மூலம் அவரது பெலனையும், வல்லமையையும், வரங்களையும், கனிகளையும், குணாதிசயங்களையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.
உதாரணமாக, பிதாவாகிய தேவனை நினைக்கும்போதெல்லாம் ஒரு பெரிய கழுகின் உருவம் நம்முடைய மனக்கண்களுக்கு முன்பாக வருகிறது. இயேசுகிறிஸ்துவைக்குறித்து நினைக்கும்போதெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியின் உருவம் நம் மனக்கண்களுக்கு முன்பாக வருகிறது. அதுபோலவே ஆவியானவரைக் குறித்தும் பல அடையாளங்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் புறாவைப் போன்றவர், அக்கினியைப் போன்றவர், பெருங்காற்றைப் போன்றவர், முத்திரையைப் போன்றவர், எண்ணெயைப் போன்றவர், அச்சாரத்தைப் போன்றவர் என்று பல வகையான விளக்கங்களை வேதம் சொல்லுகிறது.
நாம் அவரை அதிகமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அவருக்கு இத்தனை ஒப்பீடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு வைரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு பல முகப்புகள் உண்டு. ஒரு முகப்பு மட்டும் வைரமாகிவிடாது. எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக பார்க்கும்போதுதான் வைரத்திற்கு உள்ள முழு அழகையும், மேன்மையையும், வனப்பையும், அளவீடு செய்யமுடியும். அதுபோல ஆவியானவருக்கு இருக்கிற ஒப்பீடுகளையெல்லாம் மொத்தமாகப் பார்க்கும்போதுதான் அவருடைய முழு தன்மையையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
தேவபிள்ளைகளே, ஆவியானவரைக்குறித்து அறிந்துகொள்ளுகிறது மாத்திரமல்ல, அவரை தனிப்பட்ட முறையில் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். அவரோடு ஆழமான அனுபவத்திற்குள் கடந்துசெல்லுங்கள்!
நினைவிற்கு:- “உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்” (யோவான் 14:17).