“நித்திய பிதா” என்ற வார்த்தை கத்தோலிக்க வேதாகமத்திலே “முடிவில்லாத தந்தை” என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கர்த்தர் என்பது, “வியத்தகு ஆலோசனையாளர்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டுவித குறிப்புகளையும் அருகில் வைத்து வாசிக்கும்போது சில விளக்கங்கள் நம் உள்ளத்தை பரவசப்படுத்துகின்றன.
நம் ஆண்டவர் நித்திய பிதா என்றும், முடிவில்லாத தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். உலகத்திலே தகப்பனுடைய அன்பு விசேஷமானது. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங்கீதம் 103:13) என்று வேதம் சொல்லுகிறது.
ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்காக இரவும் பகலும் பாடுபடுகிறான். சம்பாதிக்கிறான், பிள்ளைகளுக்காக யாவையும் செய்கிறான். தன் பிள்ளைகளை ஒழுக்கமுள்ள பாதையில் நடத்துகிற பொறுப்பை தகப்பன் மேற்கொள்ளுகிறான். பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்காக இரவும் பகலும் முயற்சிக்கிறான்.
என்னதான் தகப்பன் அன்பு செலுத்தினாலும், தகப்பனும் மனிதன்தானே. வயது செல்ல செல்ல பெலவீனங்கள் மேற்கொள்ளுகின்றன. காலங்கள் கடக்கும்போது இறுதியில் தகப்பன் மரிக்க நேரிடுகிறது. பிள்ளைகள் தகப்பனற்ற நிலைமையிலே நிற்கிறார்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்துவோ, பிதா என்று அழைக்கப்படுகிறார். நித்திய நித்தியமாய் அவர் அன்பு கூருகிறார். முடிவில்லாத நேசத்தோடு அரவணைத்துக்கொள்ளுகிறார். அவர் மரிப்பதில்லை. என்றென்றும் உயிரோடிருக்கிறார். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரே. 31:3) என்று அவர் சொல்லுகிறார்.
நித்திய பிதாவின் இரக்கங்களும் நித்தியமானது. அவருடைய கிருபை என்றென்றைக்கும் உள்ளது (புலம். 3:22). வேதம் சொல்லுகிறது, “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 1:3).
ஒரு கெட்டகுமாரன் மனம் திரும்பி வந்தபோது தகப்பன் எவ்வளவு மனதுருகினார் பாருங்கள். கடந்த கால கசப்பு உணர்ச்சிகள் எல்லாம் தகப்பனைவிட்டு ஓடிவிட்டன. தகப்பன் எந்த கோபமோ, வைராக்கியமோ பாராட்டவில்லை. அவனை குற்றஞ்சாட்டவும் இல்லை. வேசிகளிடத்தில் என் ஆஸ்தியை அழித்துப்போட்டுவிட்டாயே என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மாறாக, மகனுக்கு எதிர்கொண்டு ஓடிபோய் அவனை அரவணைத்து முத்தமிட்டு உயர்ந்த வஸ்திரத்தை உடுத்துவித்து வரவேற்றார்.
பூமிக்குரிய தகப்பனுடைய அன்பே அவ்வளவு பெரிதாக இருக்குமென்றால், கர்த்தருடைய அன்பு எத்தனை அதிகமாய் இருக்கும்! அவரது இரக்கங்களுக்கு முடிவே இல்லை. நமக்கு மீட்பு உண்டாக்கும்படி இயேசு சிலுவையைச் சந்தித்தார். சாத்தானுடைய தலையை நசுக்கினார். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய அன்பு ஒரு முடிவில்லாத அன்பு.
நினைவிற்கு:- “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 54:10).