« Back to word list

எசேக்கியேல் (Ezekiel)

(கர்த்தர் பலப்படுத்துகிறார்)

இவன் பிரதான தீர்க்கதரிசிகளில் ஒருவன். ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த பூசி என்பவனின் குமாரன் (எசே. 1:3). கி.மு. 597-ல் நெபுகாத்நேச்சார் பாபிலோனுக்குச் சிறையாக்கிக்கொண்டு போனவர்களில் ஒருவன். சிறையிருப்பின் ஐந்தாம் வருடம் முதல் இருபத்திரண்டு வருடங்களாக, சிறைப்பட்டவர்களுக்குக் கேபார் நதியண்டையில் தெலாபீபிலே ஆசாரிய ஊழியஞ் செய்தான் (எசே. 3:15-17).

யூதாவின் மூப்பர்கள், முக்கியமான எல்லா விஷயங்களிலும் இவனுடைய ஆலோசனையைக் கேட்கிறது வழக்கமாயிருந்தது (எசே. 8:1; 14:1; 20:1), அவன் எழுதினவைகளிலிருந்து அவனைப்பற்றி நாம் அறியக்கூடியவை. அவன் விவாகம் செய்திருந்தானென்பதும் அவனுக்கு ஒரு வீடு இருந்தது என்பதுமே (எசே. 3:24; 8:1; 24:18). மற்றத் தீர்க்கதரிசிகளைக்காட்டிலும் இவன் போதக ஊழியமும் செய்ததாகத் தெரிகிறது (எசே. 3:17; 33:3-16).

எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி "மனு புத்திரனே உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன். நீ என் வார்த்தையைக் கேட்டு துன்மார்க்கனை எச்சரிப்பாயாக. நீ அப்படிச் செய்யாவிட்டால் அவன் இரத்தப் பழியை உன்னிடம் கேட்பேன்" என்று சொல்லப்பட்டது.

எசேக்கியேல் இஸ்ரவேல் மூப்பர்களுக்குச் சொன்னதாவது: அவர்களுக்கு வந்த தண்டனைக்குக் காரணம் அவர்களுடைய துணிகரமான செய்கைகளும், கீழ்ப்படியாமையுமே. இப்போதும் எகிப்தியருடைய உதவியால் அவர்களுக்கு மீட்பு வருமென்று காத்திராமல், தேவன் குறித்த தண்டனை முற்றாய் அவர்களுக்கு வருமென்று ஏற்றுக் கொள்ளவேண்டும். அதாவது எருசலேம் முற்றாய் அழிக்கப்படும். அதோடு எழுபது வருட சிறையிருப்பும் அவர்களுக்கு இருக்கும் என்பதே. மேலும், சம்பவிக்க வேண்டியதே அவர்களுக்குச் சம்பவித்தது என்றான். ஆனாலும் கர்த்தர் அவர்களோடு செய்த சமாதான உடன்படிக்கை நிறைவேறும்.

கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலர் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள். அவர்கள் என் ஜனமாயிருப்பார்களென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

« Prev 118 / 564 Next »