எரிகோ (Jericho)
(வாசனையான)
சாக்கடலுக்கு வடக்கே, யோர்தான் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு பட்டணம். கடல் மட்டத்திலிருந்து 800 அடி கீழேயிருந்தது. இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்தபின் கைப்பற்றின முதலாவது பட்டணம் (யோசுவா. 6:20). ஏழு ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாக ஏழு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு ஒரு நாளைக்கு ஒரு தரமாக ஆறு நாள் பட்டணத்தைச் சுற்றி வந்தார்கள். ஏழாம் நாள் ஏழுதரம் பட்டணத்தைச் சுற்றிவந்து, ஏழாம்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதி, கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்தார்கள். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்து விழுந்தது. ஜனங்கள் பட்டணத்தைப் பிடித்து சகலத்தையும் சங்காரம் பண்ணினார்கள் (யோசுவா. 6:1-21). வேவு பார்க்கப்போன இரண்டு இஸ்ரவேலரைப் பாதுகாத்த ராகாபும் அவள் வீட்டாரும் தப்புவிக்கப்பட்டார்கள் (யோசுவா. 6:25). அவ்வேளையில் எரிகோ பட்டணத்தைத் திரும்பக் கட்டும்படி எழும்பும் மனுஷன்மேல் யோசுவா சாபம் கூறினான் (யோசுவா. 6:26). அதன்படி பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினபோது, தன் மூத்த குமாரனாகிய அபிராமையும், இளைய குமாரனாகிய செகூப்பையும் சாகக் கொடுத்தான் (1 இரா. 16:34).
எலியாவின் நாள்களில் தீர்க்கதரிசிகளின் பாடசாலை எரிகோவி லிருந்தது (2 இரா. 2:5; 4:38). சிதேக்கியா ஓடிப்போகையில் எரிகோவின் சமபூமியில் அவனைப் பிடித்தார்கள். (2 இரா. 25:5; 1 நாளா. 28:5; எரே.39:5).
சிறையிருப்பிலிருந்துத் திரும்பி வந்தவர்கள் எரிகோவில் குடியேறினார்கள் (எஸ்றா. 2:34; நெகே. 7:36).
புதிய ஏற்பாடு காலத்து எரிகோ மகா ஏரோது என்பவனால் கட்டப்பட்டது. இயேசு எரிகோவிற்குக் கிட்ட பர்திமேயுவுக்கும், வேறு குருடருக்கும் சுகம் கொடுத்தார் (மத். 20:29; மாற்கு 10:46; லூக்கா. 18:35). இயேசு எரிகோவின் வழியாய் போகையில் சகேயுவைச் சந்தித்தார் (லூக்கா. 19:1).