கில்கால் (Gilgal)
(வட்டம்)
யோர்தானுக்கும் எரிகோவுக்குமிடையிலுள்ள இடம். இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்த பின் முதன் முதல் இங்கே பாளய மிறங்கினார்கள். யோர்தானிலிருந்தெடுத்த பன்னிரெண்டு கற்களை யோசுவா கில்காலில் நாட்டினான் (யோசுவா. 4:20). விருத்தசேதனம் பெறாதிருந்த இஸ்ரவேல் புத்திரர் இங்கே விருத்தசேதனம் பண்ணப் பட்டார்கள் (யோசுவா. 5:3). எகிப்தின் நிந்தையை புரட்டிப் போட்டதால் அந்த ஸ்தலத்துக்கு “கில்கால்" எனப் பெயர் வந்தது.
பஸ்காவையும் அங்கே ஆசரித்தார்கள். மறுநாளில் அந்தத் தேசத்துத் தானியத்தைப் புசித்தபோது, மன்னா பெய்யாமல் ஒழிந்தது (யோசுவா.5:9-12).
கிபியோனியர் கில்காலிருக்கிற பாளயத்துக்கு வந்து தந்திரமாய் யோசுவாவோடு சமாதான உடன்படிக்கைச் செய்தார்கள் (யோசுவா. 9:3-15).
இந்த இடத்தில் சாமுவேல் ஆகாகைத் துண்டித்தான் (1 சாமு. 15:33). சவுல் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதும் புறக்கணித்து தள்ளப்பட்டதும் இங்கேயே (1 சாமு. 11:14, 15:23).
அப்சலோமின் கலகத்தின் பின், தாவீது திரும்பி வந்தபோது, யூதாகோத்திரத்தார் கில்காலில் அவனை அங்கீகரித்தார்கள் (2 சாமு. 19:15).
தீர்க்கதரிசிகளின் நாள்களில் கில்கால் ஒரு விக்கிரக ஆராதனைக் குரிய இடமெனக் கண்டிக்கப்பட்டது (ஆமோஸ். 4:4; 5:5; ஓசியா 4:15; 9:15; 12:11).