சீலா (Sila)
சீலா ஒரு தீர்க்கதரிசி. அப்போஸ்தல நடபடிகளில் சீலா என்றும், நிருபங்களில் சில்வானு என்றும் குறிக்கப்படுகிறான். சீலா, ரோம தேச சுதந்தரமுள்ள ஒரு யூதன் (அப். 16:37).
எருசலேம் சபையிலிருந்த சகோதரரில், பர்னபாவும், சீலாவும் விசேஷித்தவர்கள். அங்கே கூடிய ஆலோசனை சங்கத்தின் தீர்மானங்களை மற்றச் சபைகளுக்குக் கொண்டு போகும்படி. தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் சீலாவும் ஒருவன் (அப். 15:22, 27).
சீலா அந்தியோகியாவுக்குப் போய், தீர்க்கதரிசன வார்த்தைகளால் சகோதரருக்குப் புத்தி சொல்லி அவர்களைத் திடப்படுத்தினான் (அப். 15:32).
பர்னபாவும், பவுலும் பிரிந்தபோது, பவுல் சீலாவைக் கூட்டிக் கொண்டு தன் இரண்டாம் பிரயாணத்தில் போனான். இவர்கள் பிலிப்பு பட்டணத்துக்குப் போயிருக்கையில், கலகம் உண்டாகி, காவலில் போடப்பட்டார்கள் (அப். 16:12-39). விடுதலையாக்கப்பட்ட பின் தெசலோனிக்கேயாவுக்குப் போன வேளையில் அங்கேயும் கலகம் உண்டானதால் அவ்விடமிருந்து பவுலும், சீலாவும் பெரோயாவுக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கேயும் யூதர் கலகம் உண்டாக்கினதினிமித்தம் பவுல் அத்தேனேக்கு அனுப்பப்பட்டான். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கினார்கள் (அப். 16:40; 17:14).
சீலா பின்பு பிலிப்பு பட்டணத்திற்குப் போனான் (பிலி. 4:15). பவுல் கொரிந்திலிருந்து நிருபங்கள் எழுதின வேளையில் சீலா அவனோடிருந்தான் (2 கொரி. 1:19; 1 தெச. 1:1; 2 தெச. 1:1; அப், 17:4; 14,15).
பேதுருவும் சீலாவைப்பற்றி 1 பேதுரு. 5:12இல் குறித்துள்ளான்.