தீரு (Tyre)
(கன்மலை)
கர்மேல் மலையிலிருந்து வடக்கே 35 மைல் தூரத்திலுள்ள பெனிக்கேயரின் ஒரு பூர்வீகத் துறைமுகம். கரையில் இருந்து 1/2 மைல் தூரத்திலிருந்த ஒரு தீவில் கட்டப்பட்டிருந்த ஒரு கோட்டை இங்கு இருந்தது. இஸ்ரவேலர் கானான் தேசத்தைக் கைப்பற்றினபின் இந்தப் பகுதி ஆசேர் கோத்திரத்துக்கு கொடுக்கப்பட்டும் அவர்கள் அதை ஆட்சிகொள்ளவில்லை (யோசுவா. 19:29).
தீருவின் இராஜாவாகிய ஈராம், தாவீது, சாலொமோன் என்னும் இராஜாக்களின் கட்டுமானங்களுக்குக் கேதுரு மரங்களையும், வேலைக்காரரையும் கொடுத்தான் (1 இரா. 5:1-16; 1 நாளா. 14:1).
நினிவேயின் வீழ்ச்சியின் முன் இரண்டு நூற்றாண்டுகளாக அசீரியா இராஜாக்களாகிய சல்மனேசர், சனகெரிப், அசூர்பனிபல் என்பவர்களால் தீரு தாக்கப்பட்டது. கி.மு. 606க்கு பின், தீரு இருந்த மேன்மையான நிலையைப் பற்றி, எசேக்கியேல் கூறுகிறான் (எசே. 26- 28). அதோடு அங்கிருந்த அக்கிரமத்தின் மிகுதியால் அது அழிக்கப்படுமென்று எசேக்கியேல் முன்னறிவித்தது, நேபுகாத்நேச்சார் பதின்மூன்று வருடமாய் முற்றுகை போட்ட பின் கைப்பற்றினதில் நிறைவேறிற்று (கி.மு. 573). அதைக்
கி.மு. 332இல் மகா அலெக்சாந்தர் அதைக் கீழ்ப்படுத்தி, அங்கிருந்த ஜனங்களைக் கொடுமையாய் நடத்தி, 40,000 பேரைக் கொலை செய்தான்.
கி.மு. 65இல் ரோமர் அதற்கு சுயாதீனம் கொடுத்ததினிமித்தம் தேசம் செழிப்புற்றது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில், அங்கிருந்த வியாபாரிகள் மீன், சரக்கு முதலியவற்றை எருசலேமுக்குக் கொண்டுபோனதாக நெகே. 13:16இல் குறித்துள்ளது.
இயேசு கலிலேயாவில் செய்த அற்புதங்களைக் கேள்விப்பட்டு, தீரு பட்டணத்து ஜனங்கள் அவரிடத்தில் வந்தார்கள் (மாற்கு. 3:8).
பின்பு இயேசுவும் அங்கே போயிருந்து அற்புதங்கள் செய்தார் (மாற்கு.7:24).
பவுலும் எருசலேமுக்குப் போகும்போது, தீரு துறைமுகத்திலிறங்கி. ஏழு நாள்கள் அங்கிருந்த சீஷருடன் தங்கினான் (அப். 21:3).