நாத்தான் (Nathan)
(கொடை)
1. தாவீது, சாலொமோன் என்பவர்களின் நாள்களில் இருந்த ஒரு தீர்க்கதரிசி. தாவீது கர்த்தருக்குத் தேவாலயம் கட்ட யோசித்தபோது, இவன் முதலாவதாக அவனை தைரியப்படுத்தினான். பின்பு கர்த்தரின் வெளிப்படுத்தல் கிடைத்ததினிமித்தம் அவன் தாவீதிடம் அவனல்ல, அவனுடைய மகன் சாலொமோனே அதைக் கட்டுவான் என்று சொன்னான் (2 சாமு. 7:1-17; 1 நாளா. 17:1-15).
தாவீது பத்சேபாளோடு கூட செய்த பாவத்தினிமித்தம் கர்த்தர் இவன் மூலமாகத் தாவீதைக் கண்டித்தார் (2 சாமு. 12:1-25).
அதோனியா தான் இராஜாவாக எத்தனித்தபோது, இவன் சாலொமோனுக்கு உதவியாயிருந்து அவனை அபிஷேகம் பண்ணினான் (1 இரா. 1:8-45).
ஆலயத்தில் கீத வாத்தியங்கள் வாசிக்கும்படி ஒழுங்கு செய்தவர்களில் இவனும் ஒருவன் (2 நாளா. 29:25).
தாவீது, சாலொமோன் என்பவர்களுடைய ஆளுகையைப் பற்றிய காரியங்களை இவன் ஒரு புத்தகத்தில் எழுதிவைத்தான் (1 நாளா. 29:30; 2 நாளா. 9:29).
51ஆம் சங்கீதத்தின் தலைப்பின் இவனுடைய பெயர் குறித்துள்ளது.
2. தாவீதின் மகன் (2 சாமு. 5:14; 1 நாளா. 3:5). அசரியா, சாபூத் என்பவர்களின் தகப்பன் (1 இரா. 4:5). இயேசுவின் முற்பிதா (லூக்கா. 3:31).
3. லேவியரை அழைக்கும்படி, எஸ்றா இத்தோவிடம் அனுப்பிய ஆள்களில் ஒருவன் (எஸ்றா. 8:16).
4. அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணினவர்களில் ஒருவன் (எஸ்றா. 10:39).