பெக்கா (Pekah)
(விழிப்பு - கி.மு. 768-748).
ரெமலியாவின் குமாரன். இஸ்ரவேலின் 18ஆம் இராஜா. தன் எஜமானாகிய பெக்காகியா இராஜாவைக் கொன்று போட்டு, தான் இராஜாவாகி 20 வருடம் இராஜ்யபாரம் பண்ணினான் (2 இரா. 15:27).
இவன் சீரிய இராஜாவாகிய ரேசினோடு கூடிக்கொண்டு, எருசலேமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணியும் ஜெயிக்கக்கூடாமற் போயிற்று (2 இரா. 16:5; ஏசாயா. 7:1). அப்பொழுது யூதாவின் இராஜாவாகிய ஆகாஸ் அசீரிய இராஜாவாகிய திக்லாத்பிலேசரிடம் உதவி கேட்கவே, அவன் வந்து இஸ்ரவேலின் பட்டணங்களைப் பிடித்து, ஜனங்களை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டு போனான் (2 இரா. 15:29).
யூதா ஜனங்கள் கர்த்தரை விட்டுவிட்டபடியால் பெக்கா, அவர்களுக்கு விரோதமாக வந்து, அநேகரைக் கொன்று போட்டதோடு, அநேகரைச் சிறை பிடித்து சமாரியாவுக்குக் கொண்டு போனான். பின்பு ஓதேத் தீர்க்கதரிசியின் சொற்படி அவர்களைத் திரும்ப அனுப்பினான் (2 நாளா. 28:8-15).
பிற்பாடு ஓசெயா கலகம் பண்ணி, இவனைக் கொன்று போட்டு தான் இராஜாவானான் (2 இரா. 15:30).
பெக்கா கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகாதிருந்தான் (2 இரா. 15:28).