திருமறையின் முதல் வாக்குறுதி

இன்றைய வசனம்

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவன் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதியாகமம் 3,15).

தியானம்

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவன் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதியாகமம் 3,15).

வீழ்ச்சியடைந்த மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட முதல் வாக்குறுதி இது. இதில் நற்செய்தி முழுவதும், கிருபையின் உடன்படிக்கையுடைய சாரமும் அடங்கியுள்ளன. ஸ்திரியின் வித்தாகிய நம் ஆண்டவர் இயேசு குதிக்காலில் காயம் அடைந்தார். அது பயங்கரமான காயமாயிருந்தது. ஆனால் இறுதியாகப் பாம்பின் தலையில் ஏற்படும் காயம் எவ்வளவு பயங்கரமானதாயிருக்கும்! இயேசு பாவத்தை ஏற்று, மரணத்தை வென்று, சாத்தானின் ஆற்றலை நிலைகுலையச் செய்த போது இது நடைமுறையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் நம் ஆண்டவரின் இரண்டாம் வருகையின் போதும், நியாயத் தீர்ப்பு நாளிலும் பூரணமாக நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ளது. குதிக்காலில் காயம் அடைவது போல் நம்மிலுள்ள பாவத்தன்மையின் தீய சக்திகளால் நாம் இடுக்கண் அடைவோம் என்பது முன்னுரைக்கும் வாக்குறுதியாக நமக்கு உள்ளது. ஆனால் பழைய பாம்பின் தலையை நசுக்கும் கிறிஸ்துவால் நாம் வெற்றி அடைவோம். பிசாசின் சோதனைகளாலும் அவன் வித்தாகிய தீயவர்களின் இரக்கமற்ற தன்மையாலும் ஏற்படும் அனுபவங்களினால் நாம் இந்த வாக்குறுதியின் இரண்டாம் பாகத்தை அறிந்து கொள்ள வேண்டியதாயிருக்கலாம். நாம் நொண்டி நொண்டி நடக்கத்தக்கதாக அவர்கள் நம் குதிக்காலைக் காயப்படுத்தலாம். ஆனால் நாம் திகில் அடையாதபடி இந்த வாக்குறுதியின் முதல் பாகத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வோமாக. ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவில் நாம் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் மகிழ்ச்சி பெறுவோமாக!

ஆசிரியர்

சார்லஸ் ஸ்பர்ஜன்