« Back to word list

ஆக்கில்லா (Aquila)

(கழுகு)

ஆக்கில்லா கூடாரத்தொழில் செய்த ஒரு யூத கிறிஸ்தவன். இவனும் இவனுடைய மனைவி பிரிஸ்கில்லாளும் பொந்து தேசத்திலிருந்துபோய் ரோமாபுரியில் தங்கியிருந்தார்கள். அங்கே கிலவுதியுராயன் பிறப்பித்த கட்டளையினிமித்தம், ரோமாபுரியை விட்டு கொரிந்துவுக்குப் போனார்கள். பவுல் அவர்களைச் சந்தித்து அவனும் கூடாரவேலை செய்தவனானபடியால் அவர்களோடு தங்கியிருந்தான் (அப். 18:1-3).

அந்நாள்களில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைக் குறித்து, பவுல், என் பிராணனுக்காக தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்களென்று சொல்லுகிறான் (ரோமர் 16:4).

பவுல் இவ்விடமிருந்து எபேசுவுக்குப் போன வேளையில் இவர்களும் கூடப்போனார்கள்.

அங்கிருந்த நாள்களில் அப்பொல்லோ என்னும் பேர்பெற்ற ஒரு யூதன், அங்கே போய் கர்த்தருடைய மார்க்கத்தை உபதேசித்தான். அவன் யோவானின் ஞானஸ்நானத்தை மாத்திரம் அறிந்திருந்தபடியால் இவர்கள் அவனைச் சேர்த்துக்கொண்டு மார்க்க. விஷயத்தைத் திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள் (அப். 18:24-26).

இவர்கள் வீட்டில் சபை கூடினதாகத் தெரிகிறது (1கொரி. 16:19). இவர்களிருவரும் ஊக்கமான தேவ ஊழியக்காரரா யிருந்தார்கள். பவுல் இவர்களை தன் உடன்வேலையாள்களென்று, குறிக்கிறான் (ரோமர். 16:3).

அநேக இடங்களில் பிரிஸ்கில்லாவின் பெயர் அவள் கணவன் ஆக்கில்லாவுக்கு முந்தி குறித்திருக்கிறதினால், அவள் ரோம ஸ்திரீயாயிருந்திருக்கலாம் என விளங்கலாம் அல்லது தேவ ஊழியத்தில் வல்லமையாய்ப் பாவிக்கப்பட்டவளாயிருக்கலாம்.

« Prev 64 / 564 Next »