« Back to word list

ஆசேர் (Asher)

(பாக்கியவான்)

யாக்கோபுக்கு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரன் (ஆதி. 30:13). அந்தப் பிள்ளை பிறந்தபொழுது லேயாள், "என்னைப் பாக்கியவதி என்பார்கள்" என்று சொல்லி அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

இதற்கிணங்க, யாக்கோபும் தன் பிள்ளைகளை ஆசீர்வதித்த வேளையில், "ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்' எனறான் (ஆதி. 49:20).

மோசேயும் ஆசேரைக் குறித்து, "ஆசேர் புத்திரபாக்கிய முடையவனாய் தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்" என்றான் (உபா.33:24).

எகிப்திலிருந்த காலத்திலும் இந்தக் குடும்பம் அனுகூலமடைந்தது. சீனாயில் ஜனத்தொகை எடுத்தபோது இவர்களில் நாற்பத் தோராயிரத்து ஐந்நூறு பேரிருந்தார்கள் (எண். 1:41). வனாந்தர பிரயாணத்தில் தாணுக்கருகே ஆசேர் கோத்திரம் பாளய மிறங்கியிருந்தது (எண். 2:27).

கானான் தேசம் பங்கிடப்பட்டபோது, இவர்களுக்கு ஐந்தாம் சீட்டு விழுந்து, கர்மேலிலிருந்து வடபக்கமாக கடலருகே, செழிப்பான மெகிதோப் பள்ளத்தாக்கையும், சேர்த்துக் கொடுக்கப்பட்டது (யோசுவா 19:24-31). ஆசேரியர், கானானியரைத் துரத்தாமல் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள் (நியா. 1:31,32). நியாயாதிபதிகளின் நாள்களில் இவர்கள் சிசெராவுக்கு விரோதமாய் நடந்த யுத்தத்தில் பங்கெடுக்கவில்லை. (நியா.5:17).

கிதியோன் யுத்தம் செய்தவேளையில் அவனோடு சேர்ந்திருந்தார்கள் (நியா. 6:35; 7:23).

தாவீதை இராஜாவாக்கு கிறதற்கு இந்தக் கோத்திரத்தாரும் போயிருந்தார்கள் (1 நாளா. 12:36). சாலொமோனின் மணியக்காரரி லொருவன் ஆசேரில் இருந்தான் (1 இரா. 4:16).

எசேக்கியாவின் பண்டிகை ஆசரிப்புக்கு இவர்களும் எருசலேமுக்குப் போனார்கள் (2 நாளா. 30:11).

தாவீதின் நாள்களில் யோவாப் ஜனத்தொகை எடுத்தபோது, இந்தக் கோத்திரத்தார் கணக்கிடப்படவில்லை (1 நாளா. 24:16-22).

இயேசுவைப் பிள்ளையாக தேவாலயத்துக்குக் கொண்டுபோன வேளையில் அவரை ஆசீர்வதித்த அன்னாள் இக்கோத்திரத்தாள் (லூக்கா. 2:36).

2. ஆசேர் என்று பேருள்ள ஒரு பட்டணமும் உண்டு (யோசுவா 17:7).

« Prev 68 / 564 Next »