« Back to word list

இம்மானுவேல் (Immanuel)

இதன் கருத்து : "தேவன் நம்மோடிருக்கிறார்." இயேசு ஒரு கன்னிகையினிடம் பிறப்பாரென்று ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்த வேளையில், மேசியாவுக்குக் கொடுத்த பெயர் இது (ஏசாயா.7:14). இந்தப் பெயர் தெய்வீக சுபாவமும், மனுஷீக சுபாவமும், கர்த்தரில் இருப்பதைக் காட்டுகிறது. பின்பு யோசேப்புக்குத் தேவதூதன் தரிசனமாகி சொன்னதில் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று (மத்.1:23).

சீரியா இராஜா இஸ்ரவேலரோடு கூடி, யூதா இராஜாவாகிய ஆகாசுக்கு விரோதமாய் வந்தபோது அவன் கலங்கினான். அப்பொழுது கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியை அவனிடம் அனுப்பினார்.

ஏசாயா ஆகாசிடம்போய், "கர்த்தர் உனக்கு உதவி செய்வார். நீ பயப்பட வேண்டியதில்லை. நீ நம்பாவிட்டால் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்" என்றான். ஆகாஸ் கேட்கமாட்டேன் என்றபோது ஏசாயா, "ஆண்டவர் தாமே ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” என்றான் (ஏசாயா. 7:14).

ஆகாஸ் அசீரியரின் உதவியில் நம்பிக்கை வைத்திருந்தான். ஏசாயா,அசீரியரிலிருந்தல்ல, கர்த்தரிடத்திலிருந்தே உதவி வரும் என்று அவனுக்குச் சொன்னான்.

ஏசாயா. 7:15,16இல் சொல்லப்பட்டவை ஆகாசுக்கு மீட்பு வரும் காலத்தை உவமானமாய்க் குறிக்கிறது. ஆனால் இம்மானுவேலின் அடையாளத்தை அவன் ஏற்றுக்கொள்ளாததினால், அது அவனுக் கல்ல, பின் சந்ததியாருக்கே உபயோகமாயிற்று.

« Prev 92 / 564 Next »