ஈசாய் (Jesse)
(கர்த்தர் ஜீவிக்கிறார்)
போவாஸ், ரூத் என்பவர்களின் பேரன். ராகாப் என்பவளின் பிரௌத்திரன். ஓபேத்தின் மகன். தாவீதின் பிதா. இயேசுவின் முற்பிதா (மத்: 1:5-6; லூக்கா. 3:23, 3:1-32).
கர்த்தர் சாமுவேலை நோக்கி பெத்லகேமியனாகிய ஈசாயினிடம் உன்னை அனுப்புவேன் என்றதே இவனைப்பற்றி முதன் முதல் வேதாகமத்தில் குறித்துள்ளது (1 சாமு. 16:1). “பெத்லகேம் ஊரானாகிய ஈசாய் சவுலின் நாள்களிலே வயது சென்ற கிழவனாய் மதிக்கப் பட்டான்" (1 சாமு. 17:12).
சவுலினால் துன்புறுத்தப்பட்ட நாள்களில் தாவீது மோவாபின் இராஜாவிடம்போய், தன் தகப்பனையும், தாயையும் அவனோடிருக்க ஒழுங்கு செய்தான் (1 சாமு. 22:3,4).
ஈசாய்க்கு எட்டு குமாரரிருந்தார்கள் (1 சாமு. 16:10, 11. 1 நாளா. 2:13-15).
"ஈசாயென்னும் அடி மரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்" என்று மேசியாவைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தான் (ஏசாயா. 11:1-10).