« Back to word list

ஒப்னி (Hophni)

ஓப்னி என்பதன் பொருள் “சண்டைக்காரன்.” இவன் ஏலியின் மகன். பினெகாசின் சகோதரன் (1 சாமு. 1:3). இவனும் இவனுடைய சகோதரனும், பேலியாளின் மக்களெனப்பட்டார்கள் (1 சாமு. 2:12). இவர்கள் ஆசாரிய ஊழியம் செய்தபோதிலும், இச்சை பேராசை முதலிய துர்க்குணங்கள் அவர்களில் காணப்பட்டன. தகப்பனுடைய புத்திமதிக்கும் இணங்காதவர்களாயிருந்தார்கள்.

பலியிடப்பட்டவைகளில் ஆசாரியருக்குப் போகவேண்டிய பங்கிலும் அதிகமாக பலவந்தமாய் எடுத்தார்கள் (1 சாமு. 2:13-16).

இதினிமித்தம் மனுஷர் கர்த்தருடைய காணிக்கையை வெறுத்தார்கள் (1 சாமு. 2:17-22). இதன் காரணமாக ஏலியின் குடும்பமும் சபிக்கப்பட்டது. ஒருமுறை தேவனுடைய மனுஷன் ஒருவனும், மறுமுறை இளைஞனான சாமுவேலும், ஏலியினுடைய குடும்பத்தின்மேல் வரும் தேவதண்டனையை அவனுக்கு அறிவித்தார்கள் (1 சாமு. 2:27-36; 3:11-14).

பின்பு பெலிஸ்தரோடு நடந்த யுத்தத்தில், இஸ்ரவேலர் தோற்கடிக்கப்பட்டு, ஓப்னியும், பினெகாசும் கரத்தருடைய பெட்டியை யுத்த களத்திற்குக் கொண்டுபோனபொழுது, பெட்டி பிடிக்கப்பட்டது. ஏலியின் குமாரர் கொல்லப்பட்டனர் (1 சாமு. 4:1-11). இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஏலியும், மல்லாக்காக விழுந்து செத்தான் (1 சாமு. 4:10-18).

பிற்காலங்களில் ஏலியின் சந்ததியானான அபியத்தார் ஆசாரிய நிலையிலிருந்து விலக்கப்பட்டான் (1 இரா. 2:26, 35). இதனால், அந்தக் குடும்பம் ஆசாரிய ஊழியத்திலிருந்து விலக்கப்பட்டது.

« Prev 180 / 564 Next »