சாத்தான் (Satan)
சாத்தான் என்பதன் பொருள் "எதிராளி". இப்பதத்தின் மூல அர்த்தம் "சத்துரு" (2 சாமு. 19:22). இவன் சிருஷ்டிக்கப்பட்டவன். தேவதூதர் வகுப்பைச் சேர்ந்தவன்.
ஆதியிலே பாவஞ் செய்த தூதர்களைத் தேவன் நரகத்திலே தள்ளி, நியாயந்தீர்ப்புக்கு வைத்திருக்கிறார் (2. பேதுரு. 2:4). அவர்கள் தங்கள் ஆதிமேன்மையைக் காத்துக் கொள்ளாத தூதர்கள் (யூதா. 6).
இந்த வீழ்ச்சியின் பின், சாத்தானும் அவன் கூட்டத்தாரும் ஆகாமியத்துக்கு அதிகாரிகளானார்கள். மனுஷ ஜாதியாருக்கு தீங்கு வருவிப்பதே, அவர்களது ஒரே நோக்கம். எப்படியாயினும் அவர்கள் கிரியைகள் தேவ வல்லமைக்குட்பட்டவைகள். மனுஷருடைய காரியங்களில் தலையிடுவதும், தேவனுக்கு முன் அவர்களைக் குற்றஞ்சாட்டுவதும், சாத்தானின் தொழில் (சக. 3:1,2). ஜனத் தொகையெடுக்க சாத்தான் தாவீதை ஏவினான் (1 நாளா. 21:1). சாத்தான் யோசுவாவுக்கு விரோதமாக நின்றான் (சக. 3:1). சாத்தான் தன் பகைஞனின் வலது பக்கத்தில் நிற்பானாக என்று தாவீது சொல்லுகிறான் (சங். 109:6), பிசாசானவன் ஆதிமுதல் பாவம் செய்கிறவன் (1 யோவான் 3:8).
வெவ்வேறு பெயர்கள் இவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன :
1. சோதனைக்காரன் :- (மத். 4:3; 1 தெச. 3:5).
2. சாத்தான்:- (மாற்கு 3:26; 4:15; ரோமர். 16:20).
3. பிசாசு :- (லூக்கா. 4:2-6; அப். 13:10; எபே. 4:27; 6:11).
4. பொல்லாங்கன் :- (மத். 13:19,38; 1 யோவான். 2:13,14; 3:12; 5:18).
5. பிசாசுகளின் தலைவன் :- பெயெல்செபூல் (மத். 12:24-27),
6. இவ்வுலகத்தின் அதிபதி :- (யோவான். 16:11).
7. அபெத்தோன் :- அப்பொல்லியோன், பாதாளத்தின் தூதன் (வெளி.9:11).
8. ஏவாளை வஞ்சித்த சர்ப்பம், பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்:- (ஆதி. 3:1-4; வெளி, 12:9; 20:2).
9.பேலியாள் :- (2 கொரி. 6:15).
10.எதிராளி :-(1 பேதுரு 5:8).
11. மோசம் போக்குகிறவன் : (வெளி. 12:9).
12. பொய்க்குப் பிதா :- (யோவான். 8:44).
13. கொலைபாதகன் :- (யோவான். 8:44).
14. பாவஞ் செய்கிறவன் :-(1 யோவான். 3:8).
மனுஷன் கெட்டுப் போகாதபடி நித்திய ஜீவனை அடையும்படி, தேவன் ஏற்படுத்திய பழியை ஏற்றுக்கொள்ளாதபடி, அவனை வஞ்சித்து, தன் இராஜ்யத்துக்குட்படுத்துவதே அவன் விருப்பம்.
சாத்தான் சரீர உபத்திரவத்திற்குக் காரிய கர்த்தன் என்ற கருத்துடன் 1 கொரி. 5:5இல் குறித்துள்ளது. பவுலுக்கு இருந்த வியாதியும் அவனால் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது (2 கொரி. 12:7).
இயேசுவும் தம் ஊழியத் தொடக்கத்தில் பிசாசினால் சோதிக்கப் பட்டார் (மத்.4:1-11; லூக்கா. 4:2-13). அதுமாத்திரமல்ல, எல்லா விதத்திலும் நம்மைப் போல அவர் சோதிக்கப்பட்டார் (எபி. 4:15). சீஷர் மூலமாயும் சாத்தான் அவரை சோதித்தான். "எனக்குப் பின்னாகப் போ சாத்தானே" என்று பேதுருவுக்குச் சொன்னதி லிருந்து இது தெரியவருகிறது (மத். 16:23). அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்குள்ளும் சாத்தான் புகுந்தான் (லூக்கா. 22:3).
எழுபது சீஷர் இயேசுவிடம் வந்து, தங்கள் ஊழியத்தைப் பற்றிச் சொன்னபோது, சாத்தான் வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன் என்று இயேசு சொன்னார் (லூக்கா. 10:18). இது சாத்தானின் அதிகாரம் அற்றுப் போகத் தொடங்கினதென்பதைக் காட்டுகிறது.
புதிய ஏற்பாட்டில், நன்மை, தீமை உண்டென்றும் நன்மைக்குக் காரணர் தேவன், தீமைக்கு காரணம் சாத்தான் என்றும் கருதியுள்ளது. ஆகவே தேவ மக்களுக்கு எப்போதும் போராட்டம் உண்டு. இதினிமித்தம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து பிசாசை எதிர்த்து நில்லுங்கள் என்று 1 பேதுரு. 5:9லும், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அவன் ஓடிப்போவானென்று யாக். 4:7லும், பிசாசுக்கு இடம் கொடாமல் இருங்கள் என்று எபே. 4:27லும் பார்க்கிறோம். மேலும் பவுல், "தேவன் உண்மையுள்ளவர். அவர் சோதனையோடு அதற்குத் தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார்" என்கிறான் (1 கொரி. 10:13).
ஜனங்கள் சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு, தேவனிடம் திரும்பும்படி செய்வதே, சுவிசேஷகருடைய தகுதியான ஊழியம் (அப். 26:18).
பிசாசுக்கும் அவன் தூதர்களுக்கும் நித்திய அக்கினி ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது என்று இயேசு சொல்லுகிறார் (மத். 25:41). சாத்தான் பாதாளத்திலே அடைக்கப்பட்டு சங்கிலியினால் ஆயிரம் வருடம் கட்டப்பட்டிருப்பான் (வெளி. 20:1-3). பின்பு கொஞ்சக் காலம் விடுதலையாக்கப்பட்டு கடைசியில் எரிநரகத்தில் சதாகாலமும் வாதிக்கப்படுவான் (வெளி. 20:7-10). ஆனால் இயேசு கிறிஸ்துவின் ஜீவியம், மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவைகளின் பயனாக அவன் தோற்கடிக்கப்பட்டான்.
சமாதானத்தின் தேவன், சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழ் நசுக்கிப் போடுவார் (ரோமர் 16:20).