« Back to word list

தெபொராள் (Deborah)

(தேனீ)

1. ரெபெக்காளின் தாதி. இவள் மரித்தபோது பெத்தேலுக்கு அருகே அடக்கம்பண்ணப்பட்டாள் (ஆதி. 35:8).

2. இஸ்ரவேலின் நான்காம் நியாயாதிபதி. லபிதோத்தின் மனைவி. எப்பிராயீம் மலைத் தேசமாகிய ராமாவுக்கும் பெத்தேலுக்கு மிடையிலிருந்த பேரீச்சமரத்தின் கீழ் குடியிருந்து, நியாய விசாரணை செய்தாள் (நியா. 4:5 கி.மு. 1125). அக்காலத்தில் கானானியரின் இராஜாவாகிய யாபீன் இஸ்ரவேலைக் கொடுமையாக ஒடுக்கினான் (நியா. 4:14). தெபொராள் அபினோகாமின் குமாரனாகிய பாராக்கை வரவழைத்து, யாபீனின் சேனாதிபதியாகிய சிசெராவுக்கு விரோதமாக யுத்தம் செய்யும்படி சொன்னாள். பின்பு அவளும் கூடப்போய், நடந்த யுத்தத்தில் கர்த்தர் ஜெயம் கொடுத்தார். சிசெரா தப்பி ஓடி, யாகேலின் கூடாரத்துக்குள் போனபோது கொல்லப்பட்டான் (நியா. 4:17-21).

தெபொராள் ஒரு தீர்க்கதரிசியானவள். "இஸ்ரவேலின் தாய்" என்றும் பேர்பெற்றாள் (நியா.5:7). இந்த யுத்தத்தைப் பற்றி அவளும் பாராக்கும் பாடின பாட்டு, எபிரெயக் கவிகளில் விசேஷமானது. இதில் கீசோன் நதியருகே யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் சடுதியாக மழை பெய்து, வெள்ளப்பெருக்கு உண்டாகி கானானியரின் இரதங்களை அடித்துக் கொண்டுபோயிற்று. ஆகவே தெபொராள், இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டின கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று பாடினாள் (நியா. 5:1-22).

« Prev 336 / 564 Next »