நேபுகாத்நேச்சார் (Nebuchadnezzar)
(நேபோ! தேசத்தைக் காப்பாற்றும்)
பாபிலோன் இராஜாவாகிய நெபுபொலாசாருக்குப் பின், அவனுடைய மகனாகிய இவன் 43 வருடம் (கி.மு. 605-562) அரசாண்டான். தொடக்கத்திலேயே இவன் பார்வோன் நேகோவை, (Pharaoh Necho) காமிசிலே தோற்கடித்தான் (எரே. 46:2). அடுத்த வருடம் எருசலேமைக் கீழ்ப்படுத்தினான் (தானி. 1:1,2). பின்பு எகிப்து வரைக்கும் போகையில், தகப்பன் மரித்துப்போனதாகக் கேள்விப்பட்டு, பாபிலோனுக்குத் திரும்பிப்போய், சிங்காசனத்தை உரித்தாக்கினான். இதற்கிடையில் யூதா தேசத்தார் கலகம் பண்ணினார்கள். யோயாக்கீனுடைய இராஜதுரோகம் நொறுக்கப்பட்டது (கி.மு. 597-2 3. 24:10-16; 2 இரா. 36:5-8).
பின்பு சிதேக்கியா, கலகம் பண்ணவே நேபுகாத்நேச்சார் யூதா தேசத்துக்கு மூன்றாம் முறை வந்து, எருசலேமை அழித்து, ஆலயத்தை கி.மு. 586இல் சுட்டெரித்து, பிரதான ஜனங்களைச் சிறைபிடித்துக் கொண்டு போனான் (2 இரா. 25:1-26; 2 நாளா. 36:11-20; எரே. 39:1-14; 52:1-30).
பூர்வ காலத்து இராஜாக்களில் நேபுகாத்நேச்சார் அதிக பெயர் பெற்றவன். பாபிலோனை மூன்று வரிசை அலங்கங்களால் அரணித்து, சுற்றிவர அகழ்வெட்டி, புது இராஜ மாளிகையைக் கட்டியெழுப்பி, கோயில்களைச் சீர்ப்படுத்தி, தண்ணீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் களையும் கட்டுவித்தான்.
உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாகிய பாபிலோனிலிருக்கும் தொங்கும் தோட்டத்தை (Hanging Gardens) இவன் உண்டாக்கினான்.
அவனுடைய கடைசி நாள்களில் அவனுக்கு ஒருவகை பைத்தியம் உண்டாயிற்று. தன்னைத் தானே ஒரு மிருகம் என்று எண்ணிக்
கொண்ட மனோபாவனையாய் இருக்கலாம் (தானி. 4:22-37). அவனுக்குப் பின் அவன் மகன் எவில்மெரோடாக் (Evil Merodach) இராஜாவானான்.