பரிசுத்த ஆவி (Holy Spirit)
திரியேகத்துவத்தின் மூன்றாம் நபர். சபையைப் பரிசுத்தப்படுத்துவதே இவருடைய முக்கிய கிரியை. ஞானஸ்நானம் கொடுக்கும் வேளையில் சொல்லப்படும் வாக்குமூலத்திலிருந்து இவருடைய ஆள்தத்துவம் விளங்குகிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று இயேசு சீடருக்குச் சொன்னார் (மத். 28:19).
இயேசு தாமே ஞானஸ்நானம் பெற்ற தருணத்திலும், திரியேகத்துவம் தெளிவாகக் காட்டப்பட்டது (மத். 3:16; 16,17; மாற்கு. 1:10,11; லூக்கா. 3:22).
அப்போஸ்தலனாகிய பவுல் சபைகளுக்கு வாழ்த்துதல் சொல்லும்போது, இம்மூவரையும் குறிக்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென் (2 கொரி. 13:14).
குமாரனின் வேண்டுதலின்படி பிதா, பரிசுத்த ஆவியை அனுப்புகிறதினாலும் (யோவான். 14:16,17). பிதாவினிடத்திலிருந்துக் குமாரன் பரிசுத்த ஆவியை அனுப்புகிறதினாலும் (யோவான் 15:26). அவர் பிதா, குமாரன் என்பவர்களிலும் பார்க்கக் குறைவானவரென்று நினைக்க இடமில்லை. பரிசுத்த ஆவியானவர் தாமே தமது சுயமாய்க் கிரியை செய்கிறார். ஆவியானவர் பின்வரப்போகிற காரியங்களை முன்னறிவிக்கிறவர் (1 சாமு. 10:6; 19:23,24; அப். 28:27; 1 தீமோ. 4:1). அவர் போதிக்கிறவர் (லூக்கா. 12:12). தேற்றரவாளன் (யோவான் 14:16). பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு என்பவைகளைப்பற்றி உலகத்தைக் கண்டித்து உணர்த்துகிறவர் (யோவான். 16:7,8). அவர் சத்திய ஆவி. சகல சத்தியத்துக்குள்ளும் நம்மை நடத்துகிறவர் (யோவான். 16:13). நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறவர். தேவ சித்தத்தின்படி, நமக்காக வேண்டுதல் செய்கிறவர் (ரோமர். 8:26,27). நாம் நமது கிரியைகளால் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தக்கூடும் (எபே. 4:30). அவர் தாம் தெரிந்துகொள்வோரை ஊழியத்துக்கு அழைக்கிறார். "பர்னபாவையும், பவுலையும் தான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்களென்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினார்'' (அப். 13:2).
எருசலேமில் அப்போஸ்தலரும் மூப்பரும் கூடி விருத்தசேதன விஷயத்தைப்பற்றி ஆலோசித்தபின், எழுதின நிருபத்தில் அவர்களுடைய தீர்மானங்கள், "பரிசுத்த ஆவிக்கும், எங்களுக்கும் நலமாகக் கண்டது" என்று சொன்னதிலிருந்து, அவரே சபையில் கைக்கொள்ள வேண்டிய கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறவரெனத் தெரிகிறது (அப். 15:6-29).
நாசரேத்தூரின் தேவாலயத்தில் இயேசு ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில், "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்" என்பதை வாசித்த பின், இந்த வேத வாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்றார் (லூக்கா. 4:16-21; ஏசாயா. 61:1).
ஆவியானவரே வேத வசனத்தை உறுதிப்படுத்துகிறவர் (1 கொரி. 2:5). நாம் பாவ உணர்ச்சி அடைந்து உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு,அவர் காரணகர்த்தராயிருக்கிறது மாத்திரமல்ல, நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம் என்பதற்கும் சாட்சி கொடுக்கிறார் (ரோ. 8:14- 16).நாம் விசுவாசிகளாகும்போது, அவருக்குள் முத்திரை போடப்படுகிறோம் (எபே. 1:13). அவர் மூலமாக தேவனிடம் சேரும் சிலாக்கியத்தைப் பெறுகிறோம். தேவனுடைய வாசஸ்தலமாகக் கட்டப்பட்டும் வருகிறோம் (எபே. 2:18-22).
கர்த்தருடைய ஆவியானவர் நமக்கு விடுதலையைக் கொடுத்து அவருடைய சாயலை அடையும்படி நம்மை மறுரூபப்படுத்துகிறார் (2 கொரி. 3:17,18). தேவனுடைய இராஜ்யம், நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமுமாம் (ரோம.14:17).
உண்மையான பரிசுத்த அன்பு உண்டாவதற்கு ஆவியானவரே காரணர். அன்பே ஆவியின் முதலாம் கனி. ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளும்போதே, ஆவியின் கனி ஒன்பதும், நம்மில் காணப்படக்கூடும். விசுவாச அளவின்படியே, சபையில் வரங்கள் பாவிக்கப்படும். ஊழியங்களும், அந்த அளவின்படியே நியமிக்கப்பட வேண்டும். (1 கொரி. 12:13). சபைகளில் ஐக்கியமும், ஒற்றுமையும் உண்டாவதற்கு ஆவியானவரே காரணர் (எபே. 4:3). இதினிமித்தம் நாம் ஆவியானவரைத் துக்கப்படுத்தாமலும், அவித்துப் போடாமலும் இருக்க வேண்டும். (எபே. 4:30; 1 தெச. 5:19).
ஆகவே, இந்தப் பாவம் நிறைந்த உலகத்திலே, கிறிஸ்தவர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவரின் நிறைவைப் பெற்று, அவரால் நடத்தப்பட்டால் பரிபூரணமடைந்து, பரலோக இராஜ்யத்தில் பங்குள்ளவர்களாகலாம்.
சகோதரனே, சகோதரியே, பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதே நாம் விரும்ப வேண்டிய காரியம்.