பரிசேயர் (Pharisees)
(பிரிந்தவர்கள்)
யூதருக்குள்ளிருந்த ஓர் பூர்வீக மார்க்கபேத சமயத்தினர். இவர்கள் மோசேயின் பிரமாணங்களை நுட்பமாய்க் கைக்கொள்ள வேண்டுமென்றும், மூப்பர்களின் பாரம்பரியங்களை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும் சாதித்தார்கள். “நமது மார்க்கத்திலுள்ள சமய பேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயம்” என்றும் பவுல் சொல்லுகிறான் (அப். 26:5)
அசிதீயரின் (Hasidaens) சமயத்திலிருந்து இது துவங்கியிருந்தும் பரிசேயர் என்ற பெயர் யோவான் ஹிரீனஸ் (John Hyreanus) (கி.மு. 135-105) என்பவன் காலத்தில் இருந்து வழங்கிற்று.
இவர்கள் சுயாதீனத்தை விரும்பியும், ரோம அரசாட்சிக்கு விரோதமாயிருக்கவில்லை. உலக மேன்மையை விரும்பி, ரோமரிடமிருந்து இராஜாங்கத்துக்கடுத்த நிலைமைகளைத் தேடவுமில்லை. தங்களுடைய பூர்வீக சமய ஒழுங்குகளைப் பாதுகாப்பதே, அவர்களுடைய முக்கிய நோக்கமாயிருந்தது. ஆவிகள், தேவதூதர் என்பவை உண்டென்று நம்பினார்கள். உயிர்த்தெழுதல் உண்டென்றும் ஒப்புக் கொண்டார்கள் (அப். 23:8). நியாயப்பிரமாணத்தை சொல்லர்த்தமாய்க் கைக்கொள்வது அவசியமென்று பிடிவாதமாய் நின்றதினிமித்தம், யோவான் ஸ்நானன் இவர்களை “விரியன் பாம்புக்குட்டிகள்” என்றும், இயேசு இவர்களை "மாயக்காரர்" என்றும் சொல்ல நேரிட்டது (மத். 3:7; 23:27).
துவக்கத்தில், அவர்கள் எதிர்பார்த்திருந்த மேசியா, இயேசுவாயிருக்கலாம் என்று எண்ணினார்கள். பின்பு அவர்களுடைய சில போதனைகளை அவர் கண்டித்துப் பேசினதினால், அவருக்கு விரோதிகளாயினர். கடைசியில் அவர்கள் சதுசேயர், ஏரோதியரோடு கூடி, இயேசுவின் மேல் குற்றஞ்சாட்டி, இயேசு சிலுவையிலறையப் படவும் காரணரானார்கள்.
இயேசு உயிர்த்தெழுந்தபின் அவர்களில் அநேகர் விசுவாசிகளானார்கள் (அப். 5:34; 15:5; பிலி. 3:5).