« Back to word list

பாதாளம் (Hell)

மனுஷர் மரித்தபின் போகிற இடத்துக்கு எபிரெயர் ஷீயோல் (Sheol) என்றும், கிரேக்கர் ஹாடீஸ் (Hades) அல்லது கெஹன்னா (Gehenna) என்றும் சொன்னார்கள். இப்பதங்கள் தமிழில் பாதாளம் அல்லது நரகம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இது நல்லோர் தீயோர் மரித்தபின் போகிற இடமென்று சங். 16:10, 30:3; ஏசாயா. 38:10லும் தீயோர் போகுமிடமென்று எண். 16:33, யோபு. 24:19; சங். 9:17லும் குறித்துள்ளது.

ஷீயோல் என்பது பிரேதக்குழியென்று ஆதி. 37:35; 42:38; 1 சாமு. 2:6; யோபு 14:13இல் சொல்லியுள்ளது.

எபிரேயர் மனுஷனுடைய ஜீவியத்தின் முடிவு மரணமென் றெண்ணின போதிலும், ஆபிரகாமும் வேறு விசுவாசிகளும் அது மேன்மையான பரமதேசம் என நம்பினார்கள் (எபி. 11:16).

ஹாடீஸ் ஒரு பிரேதக்குழியை அல்லது காணப்படாத உலகத்தைக் குறிக்கிறது. இயேசு போய்க்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் என்பதும் இதையே கருதுகிறது (1 பேதுரு. 3:19).

பாதாளம் என்பது வேதனைப்படுகிற இடமென இயேசு சொன்ன ஐசுவரியவானின் உவமையிலிருந்து வெளியாகிறது (லூக்கா. 16:19-31).

பிற்காலங்களில் எபிரேயர் பாதாளத்தை இன்னோம் பள்ளத்தாக்குக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். இந்தப் பள்ளத்தாக்கு எருசலேம் பட்டணத்துக்கருகே இருந்த ஒரு கால்வாய். இங்கே சாலொமோன் கேமோஸ், மோளேகு என்னும் தெய்வங்களுக்குப் பலிபீடங்களைக் கட்டினான். பின்பு யூதா இராஜாக்களில் சிலர், தங்கள் குமாரரைத் தீக்கடக்கப்பண்ணினார்கள் (2 இரா. 16:3; 2 நாளா. 28:3; 33:6). குழந்தைகளையும் பலி செலுத்தினார்கள் (எரே. 7:31).

ஆனால் யோசியா இராஜா இந்த இடத்தைத் தீட்டுப்படுத்தும்படி மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்தான் (2 இரா. 23:14; 2 நாளா. 34:5). பின்பு நகரத்திலுள்ள குப்பை கூளங்களைப் போட்டு எரித்ததினால், இந்த இடம் நித்தியமாய் எரிகிற நரகத்துக்கு ஒப்பிடப்பட்டது (மத். 10:28; 23:16; லூக்கா. 12:5).

« Prev 390 / 564 Next »