« Back to word list

பேதுரு (Peter)

(கன்மலை)

இவன் யோனாவின் மகன். அந்திரேயாவின் சகோதரன். முதலாவது யோவான்ஸ்நானனின் சீஷனாயிருந்து பின் இயேசுவின் சீஷனானான்.

அவன் பெத்சாயிதாவில் மீன் பிடிக்கிறவனாய் இருந்தான். கப்பர்நகூமில் அவனுக்கு ஒரு வீடு இருந்தது.

இவன் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டபோது, இவனுடைய கல்லைப் போன்ற குணத்தையும் முன்னிற்கும் தன்மையையும் அறிந்து, இயேசு அவனைப் பார்த்து : "நீ கேபா எனப்படுவாய்' என்றார் (யோவான்.1:42).

இவன் சீமோன், சீமோன் பேதுரு, யோனாவின் மகனாகிய சீமோன் என்றும் அழைக்கப்பட்டான்.

இயேசு தமது ஊழியத்தின் துவக்கத்தில் இவனையும் இவனது சகோதரன் அந்திரேயாவையும் சீஷராக வரும்படி அழைத்தார் (மத். 4:18).

சீஷருடைய பெயர்கள் எழுதப்பட்ட வரிசையில் இவனுடைய பெயர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் மிகவும் அன்பான மூன்று சீஷரில் இவனும் ஒருவன் (மாற்கு. 5:37; 9:2; 14:33).

இயேசு ஊழியஞ் செய்த நாள்களில், பேதுருவோடு சம்பந்தப்பட்ட காரியங்களாவன :

கப்பர்நகூமில் பேதுருவின் வீட்டில் அவன் மாமி சொஸ்தமடைந்தாள் (மத். 8:14,15).

கெனெசரேத்துக் கடலில் மீன் பிடிக்கையில் இயேசுவின் சொற்படி திரளான மீன்கள் பிடிக்கப்பட்டபோது, பேதுருவும், யாக்கோபும், யோவானும் பிரமித்தார்கள். இயேசு அவர்களை அழைத்தவுடனே, எல்லாவற்றையும் விட்டு அவருக்குப் பின் சென்றார்கள் (லூக்கா.5:1-11).

இயேசு பன்னிரெண்டு அப்போஸ்தலரைத் தெரிந்து, ஊழியத்துக்கு அனுப்பினவர்களில் முதற் பெயர் சீமோன் பேதுரு (மத். 10:1,2).

இவன் இயேசுவின் மேல் வைத்த விசுவாசத்தினிமித்தம் ஜலத்தின் மேல் நடக்கத் துணிந்தான் (மத். 14:28).

பின்பு இயேசுவும் சீஷரை நோக்கி, “நீங்களும் என்னை விட்டுப் போய்விட மனதாய் இருக்கிறீர்களா? என்று கேட்ட வேளையில், பேதுரு "ஆண்டவரே! யாரிடத்தில் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே" என்றான் (யோவான். 6:67, 68).

பிலிப்புச் - செசரியாவில் இயேசு சீஷரிடம், "என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டபொழுது, பேதுரு "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்றான் (மத். 16:16). அதற்காக இயேசு அவனை மெச்சிக் கொண்டார்.

இயேசு யவீருவின் மகளை உயிர்த்தெழுப்பினபோது தன்னுடனே கூட அழைத்துக் கொண்டுபோன மூன்று சீஷரில் பேதுருவும் ஒருவன் (மாற்கு. 5:37). மறுரூபமான பொழுதும் அந்த மூன்று பேரையே கூட்டிக்கொண்டு போனார் (மத். 17:1-5).

ஒரு மீனைப் பிடித்து, அதன் வாயிலிருந்து பணத்தை எடுத்து வரிப்பணம் கொடுக்கும்படிக்கு இயேசு பேதுருவை அனுப்பினார் (மத். 17:24).

இயேசு சீஷருடைய கால்களைக் கழுவப்போன வேளையில் பேதுரு முதலில் தடைசெய்து, பின்பு அதை விரும்பினான் (யோவான். 13:6,7,8).

                   

இராப்போஜனம்பண்ணின பின் இயேசு சீமோனை நோக்கி, "சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான்” என்றபோது பேதுரு, "காவலிலும், சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாய் இருக்கிறேன்" என்றான் (லூக்கா. 22:32).

பின்பு ஒலிவமலைக்குப் போகும்போது, இயேசு "நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்" என்றபோது பேதுரு, "நான் ஒருக்காலும் இடறலடையேன்” என்றும் சொன்னான். இயேசு சீமோனை நோக்கி, இந்த இராத்திரியிலே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்றார் (மத். 26:34).

கெத்செமனே தோட்டத்தில் பேதுருவும், செபெதேயுவின் குமாரரும் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு இயேசு பேதுருவை நோக்கி, "ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக்கூடாதா?” என்றார் (மத். 26:36-46).

கெத்செமனே தோட்டத்தில் இயேசுவைப் பிடிக்க வந்த வேளையில் பேதுரு மல்குஸ் என்பவனின் காதை வெட்டினபோது, இயேசு அவனைத் தடுத்தார் (யோவான். 18:10,11,12).

இயேசு ஆலோசனை சங்கத்துக்குமுன் விசாரிக்கப்படுகையில், பேதுரு மூன்று தடவை “அவரை அறியேன்" என்று மறுதலித்தான் (மத். 26:33-35; 69-75).

இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி கிடைத்தவுடன் பேதுருவும், யோவானும் ஓடிப்போய் கல்லறையைப் பார்த்தார்கள் (யோவான்.20:1-10). பிற்பாடு தேவ தூதன் ஸ்திரீகளுக்கு இவனுடைய பெயரைக் குறிப்பாய்ச் சொன்னான் (மாற்கு. 16:7). அன்று தானே இயேசு அவனுக்குத் தரிசனமானார் (லூக்கா. 24:34; 1 கொரி. 15:5).

பிற்பாடு திபேரியாக் கடலருகே இயேசுவை மறுதலித்ததற்குத் தக்கதாக மூன்றுமுறை அவரை அறிக்கையிடத் அவன் தருணம் கிடைத்தது. அவன் அப்படிச் செய்தபோது, அப்போஸ்தல ஊழியம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. இன்னவித மரணத்தால் அவன் இயேசுவை மகிமைப்படுத்துவானென்றும் அவர் சொன்னார் (யோவான். 21:19).

இயேசு பரலோகம் சென்ற பின், பேதுரு சீஷர்களுக்குத் தலைவனாயிருந்து செயலாற்றினான். யூதாஸ்காரியோத்தின் இடத்துக்கு இன்னொருவனைத் தெரிந்துகொள்ள பேதுரு காரணமாயிருந்தான் (அப். 1:15-26). பெந்தெகொஸ்தே நாளில் முதல் பிரசங்கம் செய்தான் (அப். 2:14-36). சப்பாணியாய்ப் பிறந்தவனை பேதுருவும், யோவானும் இயேசுவின் நாமத்தினாலே குணமாக்கினார்கள் (அப். 3:6).

யூத அதிகாரிகள் முன்கொண்டு போகப்பட்ட பொழுது பிரதிநிதியாக நின்று பேசினான் (அப். 4:8). சபை ஒழுங்கைக் கண்டிப்பாய் நடத்தினான் (அப். 5:1). விசேஷமான அற்புதங்கள் பேதுருவினால் செய்யப்பட்டன (அப். 5:15,16). இதினிமித்தம் திரளான ஜனங்கள் அப்போஸ்தலரைச் சேர்ந்து கொண்டார்கள்.

பின்பு அப்போஸ்தலர் ஆலோசனைச் சங்கத்துக்கு முன் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் பேதுரு உத்தரவு சொன்னான் (அப். 5:29-42).

ஸ்தேவான் கொல்லப்பட்டபின் பேதுருவும், யோவானும் சமாரியாவுக்குப் போய் ஊழியஞ் செய்தார்கள் (அப். அதி. 8).

பேதுரு லித்தா ஊருக்குப் போய் அங்கே திமிர்வாதமாய்க் கிடந்த ஐனேயாவைக் குணமாக்கினான். யோப்பா பட்டணத்தில் தொற்காளை உயிர்த்தெழுப்பினான். அதன்பின் ஒரு தரிசனங்கண்டு, செசரியாவுக்குப் போய் கொர்நேலியுவையும், அவன் வீட்டாரையும் குணப்படுத்தினான் (அப். 9:32-41).

இப்படியாகத் தான் புறஜாதியாரிடத்தில் போய் செய்த ஊழியத்தைப் பற்றி எருசலேம் சபையாருக்கு விவரித்துச் சொன்னான் (அப். 11:1-17).

ஏரோது-அந்திப்பா பேதுருவைக் காவலில் போட்ட வேளையில் சபையார் ஊக்கமாய் ஜெபம் பண்ணினபோது, அவன் விடுதலைப் பெற்றான்.

பின்பு விருத்தசேதன விஷயத்தைப்பற்றி தீர்மானம் செய்யும்படி, அப்போஸ்தலர் எருசலேமில் கூடியிருந்த வேளையில் பேதுருவும் தன் சாட்சியைச் சொல்லி கிரியைகளினாலல்ல, விசுவாசத்தினாலேயே இரட்சிப்பு உண்டாகும் என்பதை உறுதிப்படுத்தினான் (அப். 15:7-11).

பேதுரு தன் மனைவியோடும் கூடப்போய் சுவிசேஷத்தைக் கூறினதாகத் தெரிகிறது. (I கொரி. 9:5). இவன் எழுதின இரண்டு நிருபங்களில் இரண்டாவதைத் தான் மரணமடையுமுன் ரோமாபுரியிலிருந்து எழுதினான் (2 பேதுரு. 1:12-15).

இவன் கி.பி. 67இல் இரத்தசாட்சியாய்த் தன் 75ஆம் வயதில் மரித்ததாகத் தெரிகிறது. பாரம்பரியத்தின்படியும், இவன் வேண்டுதலின்படியும் தலை கீழாய்ச் சிலுவையில் அறையப்பட்டான்.

                            

பேதுருவின் முதன்மை

இயேசு பேதுருவை நோக்கி, "நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்" (மத். 16:18) என்றதிலிருந்து சபை பேதுருவில் கட்டப்படும் என்று எண்ணுவது தவறு

இயேசுவே முக்கியமான மூலைக்கல். பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் திருச்சபையின் அஸ்திபாரக் கற்கள் (எபே. 2:20; 1 பேதுரு. 2:4).

சிலர் "கல்" என்பது பேதுரு இயேசுவைப்பற்றிச் சொன்ன அறிக்கையைக் குறிக்கிறது என்கிறார்கள்.

"என் சபை" என்பது உலகத்தில் உள்ள விசுவாசிகள் எல்லாரையும் குறிக்கும்.

இன்னும் பரலோக இராஜ்யத்தின் திறவுகோல் என்னும் அதிகாரம் பேதுருவுக்கு மாத்திரமல்ல. மற்ற சீஷர்களுக்கும் கொடுக்கப்பட்டது (மத். 18:18); யோவான். 20:23).

பேதுருவே பெந்தெகோஸ்தே நாளில் இஸ்ரவேலருக்கும், கொர்நெலியுவின் வீட்டில் புறஜாதியாருக்கும் சுவிசேஷக் கதவைத் திறந்தான் (அப். 2:38-42; 10:34-46).

மாற்கு தன் சுவிசேஷத்தை எழுதுகிறதற்கு வேண்டிய காரியங்களை பேதுருவினிடத்திலிருந்துப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

« Prev 429 / 564 Next »