மன்னா (Manna)
இது, இஸ்ரவேலர் 40 வருடமளவும் வனாந்தரத்தில் புசித்த ஆகாரம் (யாத். 16:35). சீன் வனாந்தரத்தில் ஜனங்கள் ஆகாரக்குறைவைப் பற்றி முறுமுறுத்தபோது, கர்த்தர் வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணினார் (யாத். 16:4; சங். 78:23,24). அவர்கள் கானான் தேசத்துக்குப் போய் அதன் தானியத்தைப் புசிக்கும்வரையும் மன்னா ஒழிந்துபோகவில்லை (யோசுவா, 5:12).
முதன் முதல் பாளயத்தைச் சுற்றி பனிபெய்து நீங்கின பின், ஒரு சிறிய வஸ்து தரையின்மேல் கிடந்தது. ஜனங்கள் இதைப் பார்த்து, "இது என்ன?"என்றார்கள். அதன் அர்த்தம் மன்னா (யாத். 16:15). மன்னா கொத்துமல்லி அளவாயும், வெண்மை நிறமாயும், அதன் ருசி தேனிட்ட பணியாரத்துக்கு ஒப்பாயிருந்தது. ஜனங்கள் அதை எந்திரங்களில் அரைத்தாவது, உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்.
அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள். அதன் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசி போலிருந்தது (எண். 11:7,8,9). பின்பு ஓர் ஓமர் அளவு மன்னாவை ஒரு கலசத்தில் போட்டு, பின் சந்ததியாருக்குச் சாட்சியாக ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் வைத்தான் (யாத்.6:33,34; எபி. 9:4).
இஸ்ரவேலர் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது (யோசுவா. 5:12).
நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள் என்று இயேசுவிடம் சொன்ன வேளையில், அவர், "ஜீவ அப்பம் நானே" என்றார் (யோவான். 6:31-35).
ஜெயங் கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுப்பேன் (வெளி. 2:17).
மன்னா வானத்தின் தானியம் என்றும், “வான அப்பம்" என்றும் குறித்துள்ளது (சங். 78:24; 105:40).
பவுல் இது "ஞானப் போஜனம்" என்று ஆவிக்குரியதாகப் பயன்படுத்துகிறான் (1 கொரி. 10:3).