« Back to word list

யூதாஸ்காரியோத்து (Judas Iscariot)

இவனுடைய பெயரிலிருந்து இவன் யூதாவிலுள்ள கீரியாத் என்னும் ஊரானென்று தெரிகிறது. பன்னிரு சீஷருக்குள்ளும் இவன் மாத்திரம் கலிலேயாவைச் சேர்ந்தவனல்ல. சீஷருடைய பெயர் வரிசையில் இவனுடைய பெயர் கடைசியாக வருகிறது மாத்திரமல்ல, காட்டிக் கொடுத்தவன் அல்லது துரோகி என்றும் சொல்லியுள்ளது (மத். 10:4; மாற்கு. 3:19; லூக்கா. 6:16; யோவான். 18:2).

அப்போஸ்தலருடைய பணப்பை இவன் கையிலிருந்தது. இவன் அதிலிருந்துத் திருடினான் என்றும் சொல்லியுள்ளது (யோவான். 12:4; 13:29).

மரியாள் இயேசுவின் பாதங்களில் தைலத்தைப் பூசினபோது இவன் அவளில் குற்றம் பிடித்தான் (யோவான் 12:3,4).

இதன்பின் யூதாஸ் பிரதான ஆசாரியரிடம் போய், முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுக்க சம்மதித்து சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். (மத். 26:14-16; மாற்கு. 14:10; லூக்கா. 22:4-6).

இயேசு சீஷரோடு கடைசிப் பஸ்காவைச் சாப்பிட்ட வேளையில், "உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்" என்றார் (மாற்கு. 14:18). யூதாசும் அவரிடம் "நானோ" என்று கேட்டபோது, நீ சொல்லுகிறபடிதான் என்றார் (மத். 26:25). பின்பு இயேசு ஒரு துணிக்கையைக் தோய்த்து யூதாசுக்குக் கொடுத்து, “நீ செய்கிறதைச் சீக்கிரம் செய்" என்றார். உடனே அவன் புறப்பட்டுப் போனான் (யோவான்.13:30).

அந்த இராத்திரியே, யூதாஸ் கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவை முத்தத்தினால் காட்டிக் கொடுத்தான் (மாற்கு. 14:45). அவர் சிலுவையிலறையப்படத் தீர்மானிக்கப்பட்டதைக் கண்டு யூதாஸ் மனஸ்தாபப்பட்டு வெள்ளிக்காசை தேவாலயத்தில் எறிந்து விட்டுப்போய், நான்று கொண்டு செத்தான் (மத். 27:1-5). அவன் தலை கீழாக விழுந்து, வயிறு வெடித்து குடல்களெல்லாம் சரிந்து மரித்தான் (அப். 1:18).

"கேட்டின் மகன் கெட்டுப் போனானேயல்லாமல்” என்று இயேசு தமது கடைசி ஜெபத்தில் யூதாசைப்பற்றிச் சொன்னார் (யோவான் 17:12). அப்போஸ்தலர் யூதாசுக்காக இன்னொருவனைத் தெரிந்து கொண்ட வேளையில், "யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியம்” எனறு சொன்னார்கள் (அப். 1:24)

இன்னும் ஒரு தருணத்தில், "நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்" என்று இயேசு சொன்னார் (யோவான். 13:18).

இவைகளிலிருந்து யூதாசைப் பற்றி நாம் அறியக்கூடிய விஷயங்கள்:

1. இயேசு அவனை நல்ல நோக்கத்தோடு தெரிந்திருப்பார். அவனுக்கு உண்மையான அப்போஸ்தலர் நிலைக்கு வரஇடமிருந்தது. இயேசுவும் அவனை ஆதாயப்படுத்திக் கொள்ள பல முறைகளில் தண்டித்தார். ஆனாலும் அவன் தன் நடக்கையினால் அந்த அழைப்பை இழந்தான்.

2. தேவனுடைய முன் அறிவு என்பது அவருடைய முன்தீர்மான மல்ல. தேவன் ஒருவரையும் நரகத்துக்குப் போகும்படி முன்னமே நியமிக்கமாட்டார். யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்ததும் தேவ தீர்மானத்தின்படி அல்ல.

துன்மார்க்கருக்கு வர இருக்கும் தண்டனை தேவ நியமத்தின்படி அல்ல. அவர்களுடைய நடக்கைக்கேற்றதாகவே இருக்கும்.

3. யூதாஸ் இயேசுவோடுகூட இருந்தபோதிலும் அவருடைய ஆவி அவனிலிருக்கவில்லை. “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், மாம்சத்துக்குட்பட்டவர்களாயிருக்க மாட்டீர்கள்" (ரோமர் 8:9). கிறிஸ்துவின், ஆவியைப் பெற்றுக்கொள்ளாமல், கிறிஸ்தவன் என்று காட்டுவது பயங்கரமான காரியம்.

« Prev 499 / 564 Next »