யெப்தா (Jephthah)
இவன் நியாயாதிபதிகளில் பெயர் பெற்ற ஒருவன் (நியா. 11). கிலெயாத் என்பவனுக்குப் பிறந்த ஒரு பரஸ்திரீயின் குமாரன். கிலெயாத்தின் மற்ற பிள்ளைகள் இவனை ஏற்றுக் கொள்ளாததினிமித்தம், இவன் தோப் தேசத்துக்குப்போய், அங்கே வீணரான மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, கொள்ளை அடித்து ஜீவித்தான்.
அம்மோனியர் இஸ்ரவேல் மேல் யுத்தம் செய்யப் போனபோது, கிலெயாத்தின் மூப்பர், தங்களுக்கு உதவி செய்யும்படி யெப்தாவைக் கேட்டார்கள். இவன் தான் ஜெயம் பெற்றால் தன்னைத் தலைவனாக ஏற்படுத்த வேண்டுமென்று பொருத்தனை கேட்டுப் பெற்றான் (நியா.11:10).
அதன்பின் யெப்தா ஜனங்களைச்
சேர்த்துக்கொண்டு மிஸ்பாவுக்கு வந்து, கர்த்தருக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டுபோய்
அம்மோனியரைத் தோற்கடித்தான். பின்பு தன் வீட்டுக்குத் திரும்பி வருகிறபோது, தனது ஒரே குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ் செய்து
அவனுக்கு எதிர்கொண்டு போனாள். யெப்தா தான் செய்த பொருத்தனையினிமித்தம் கலங்கினான். ஆனால் அவளோ தகப்பனைத் தைரியப்படுத்தி, செய்த பொருத்தனையை நிறைவேற்றும்படிச் சொன்னாள். அவள் துக்கம் கொண்டாட இரண்டு மாதம் தவணை கொடுத்தபின், தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான் (நியா.11:39).
எப்பிராயீம் மனுஷர் தங்களை அம்மோனியருடன் யுத்தம் செய்ய அழைக்கவில்லை என்று யெப்தாவில் குற்றம் பிடித்து, அவன்மேல் யுத்தம்பண்ண வந்தபோது தோற்கடிக்கப்பட்டார்கள் (நியா. 12:1-6).
யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடம் நியாயம் விசாரித்தபின், மரித்து அடக்கம்பண்ணப்பட்டான் (நியா. 12:7).
கர்த்தர் யெப்தாவைக் கொண்டு இஸ்ரவேலருக்குச் செய்த நன்மையைப்பற்றி சாமுவேல் குறித்துள்ளான் (1 சாமு. 12:11).