யேசபேல் (Jezebel)
இஸ்ரவேல் இராஜாவாகிய ஆகாப் என்பவனின் மனைவி. சீதோனியரின் இராஜாவாகிய எத்பாகாலின் குமாரத்தி (1 இரா. 16:31). அசீரியா இஸ்ரவேலுக்கு விரோதமாயிருந்தபடியால் இஸ்ரவேல் தங்கள் பாதுகாப்புக்காக தீரு, சீதோன் தேசங்களின் உதவி பெறும் நோக்கமாய், இந்தச் சம்பந்தம் கலந்திருக்கலாம். அதோடு அவளுக்காக ஆகாப் சமாரியாவில் பாகாலுக்குப் பலிபீடத்தையும் விக்கிரகத் தோப்பையும் உண்டாக்கினான் (1 இரா. 16:32,33). அவளுக்கு நானூற்றைம்பது பாகாலின் தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள் (1. இரா. 18:19) இதினிமித்தம் அவளுக்கும், எலியா தீர்க்கதரிசிக்குமிடையில் விரோதமுண்டாயிற்று. கர்மேல் மலையின் மேல் இரு பகுதியாருக்குமிடையிலுண்டான வாக்கு வாதத்தின் பயனாக, எலியா பாகாலின் தீர்க்கதரிசிகள் எல்லாரையும் வெட்டிப்போட்டான் (1 இரா. 18:20, 40).
யேசபேல் இதை அறிந்த போது, எலியாவைக் கொன்று போட எண்ணினதால், அவன் புறப்பட்டு வனாந்தர வழியாய்ப் போனான் (1 இரா. அதி. 19).
பின்பு நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் விஷயத்திலும் இவள் முன்னின்று மும்முரமாய்க் காரியங்களை நடப்பித்ததினிமித்தம், ஆகாபின் குடும்பத்துக்கு அழிவுண்டாயிற்று (1 இரா. 21).
ஆகாப் மரித்தப்பின், இவள் பன்னிரெண்டு வருடம் இராஜரீக அதிகாரம் செலுத்தினாள். அகசியா, யோராம் என்பவர்களின் நாள்களிலும் இவளே தலைவியாயிருந்தாள்.
பின்பு யெகூ என்பவன் கலகம்பண்ணி, யெஸ்ரயேலுக்குப் போன வேளையில், இவள் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, அவனோடு பரிகாசமாய்ப் பேசினதினிமித்தம் கொல்லப்பட்டாள் (2 இரா. 9.30- 32 ) (கி.மு.841).
தியத்தீரா சபைக்கு எழுதப்பட்ட நிருபத்தில் ஒரு யேசபேலைப் பற்றிச் சொல்லியுள்ளது (வெளி. 2:20). இவள் ஒரு பொய்த்தீர்க்கதரிசி என்றும், சமய சம்பந்தமாகப் பொய்ப் போதனைகளைக் கொடுத்தவளென்றும் தெரிகிறது. இப்படிப்பட்டவர்கள் அச்சபையிலிருந்திருக்கலாம். இப்பெயர் மதபேதத்தைக் குறிக்கிறது.