யேகோவா (Jehovah)
இது தேவனுடைய பெயர்களில் ஒன்று. இஸ்ரவேலரை மீட்கும்படி, தேவன் மோசேயை மீதியான் தேசத்திலிருந்து எகிப்துக்கு அனுப்பின வேளையில், இந்தப் பெயரைச் சொல்லி, தம்மை வெளிப்படுத்தினார் (யாத். 6:3). ஆகிலும் கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன், கொலை செய்யப்பட்ட வேண்டுமென்று லேவி 24:16இல் குறித்துள்ளதைத் தப்பிதமாக விளங்கிக்கொண்டு அந்தப் பெயரை இஸ்ரவேலர் முழுமையும் உச்சரியாமல் சில எழுத்துக்களையே சொல்வது வழக்கமாயிற்று.
பூர்வ காலத்தில் ஒரு முக்கிய கருத்தோடு மனிதருக்குப் பெயரிடுவது வழக்கமாயிருந்தது. வேதாகமக் காலங்களிலும் அப்படி நடந்தது. கோத்திரப் பிதாக்களின் நாள்களில், ஒரு பிள்ளை பிறந்தவுடன், அதன் தாய் ஒரு பெயர் கொடுப்பாள் (ஆதி. 4:1; 19:37; 29:32), பின்பு விருத்தசேதனம் செய்யும் வேளையில், தகப்பனும் ஒரு பெயர் கொடுத்ததாகத் தெரிகிறது (லூக்கா. 1:56-63). அதன்படியே தற்காலத்திலும், ஒருவன் குணப்பட்டு ஞானஸ்நானம் பெறும்பொழுது வேறொரு பெயர் இடுவது வழக்கம்.
இவ்விதமே, தேவனும் வெவ்வேறு பெயர்கள் மூலம், தம்மை தமது ஜனங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் (யாத். 6:3; சங். 83:17; ஏசாயா. 12:2, 26:4).
தேவன் தம்மை மூன்று மூலாதார பெயர்களால் வெளிப் படுத்தியிருக்கிறார். அவைகளாவன :
1. தேவன்-ஏல்
2. உன்னத தேவன் - ஏலோகிம்
3. யேகோவா - யாவே
1. தேவன் என்பது ஒரு பொதுப்பெயர். மரமும், கல்லுமான மனுஷர் கைவேலையாகிய தேவர்களுமுண்டு (உபா. 4:28). பேய்களும் புது தெய்வங்களென்று குறித்துள்ளது (உபா. 32:17). இதினிமித்தம் மெய்த்தேவனைப் பற்றிச் சொல்லும்போது, அவனுடைய தன்மையைக் காட்டுவது வழக்கம். உதாரணமாக, "உன் கர்த்தராகிய நான் எரிச்சலுள்ள தேவன்" (உபா. 5:9). "பெத்தேலில் தரிசனமான தேவன் நானே' (ஆதி. 31:13).
2. உன்னத தேவன் - ஏலோகிம். "உன்னதமானவர்” “உன்னத கர்த்தர்" என்றும் குறித்துள்ளது (எண். 24:16; சங். 7:17). "ஏலோகிம்" எபிரெய பாஷையில் தேவன் என்பது அர்த்தம்.
3. யேகோவா யாவே. இது அவருடைய நித்தியத்துவத்தைக் குறிக்கிறது. "இருக்கிறவராகவே இருக்கிறேன்" (யாத். 6:3; சங். 82-17;ஏசாயா. 12:2; 26:4).
யோகோவாவுக்குக் கொடுத்த வேறு பெயர்கள் :
ஏல் ஓலாம் : தேவனாகிய கர்த்தர், ஆபிரகாம் பெயர்செபாவில் ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான் (ஆதி. 21:30).
ஏல் எல்லோகே இஸ்ரவேல் : யாக்கோபு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இந்தப் பேரிட்டான் (ஆதி. 33:20).
யேகோவா யீரே : ஆபிரகாம் ஈசாக்குக்குப் பதிலாக ஓர் ஆட்டுக் கடாவைக்கண்டு அதைப் பலியிட்ட இடத்துக்கு “இந்தப் பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும்" என்பதே அதன் அர்த்தம் (ஆதி.22:14).
யேகோவா நிசி : இஸ்ரவேல் அமலேக்கை முறிய அடித்த போது, மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி யேகோவா நிசி என்று பேரிட்டான். “கர்த்தர் என் வெற்றிக்கொடி" என்பது இதன் பொருள்.
யேகோவா ஷாலோம் : ஓப்ராவில் தேவ தூதன் கிதியோனுக்குத் தரிசனமான பின், அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு இந்தப்பேரிட்டான். “யேகோவா சமாதானத்தைக் கட்டளையிடுவாராக" என்ற கருத்துள்ளது (நியா.6:24).
யேகோவா சிட்கேனு : "கர்த்தர் நமது நீதி” தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப் பண்ணுவேன். அவருடைய நாமம் "நமது நீதியாயிருக்கிற கர்த்தர்" என்பதே (எரே. 23:6).
யேகோவா ஷம்மா : கர்த்தர் அங்கிருக்கிறார். இது எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட பட்டணத்தின் பெயர் (எசே. 48:35)
சேனைகளின் கர்த்தர் : சீலோவில் இந்தப் பெயரைக் கொண்டு, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள் (1 சாமு. 1:3). தாவீதும் கோலியாத்தை எதிர்த்துப் போன வேளையில் இந்தப் பெயரை உபயோகித்தான் (1 சாமு. 17:45). பின்பு சங்கீதங்களிலும் இப்பெயர் வழங்கியுள்ளது (சங். 24:10; 46:7, 11).
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் : தெபொராளின் பாட்டில் இது காணப்படுகிறது (நியா. 5:3; ஏசாயா. 17:6; செப். 2:9; சங். 59:5).
இஸ்ரவேலின் பரிசுத்தர் : ஏசாயா 29 தடவைகளில் இந்தப் பெயரை உபயோகிக்கிறான் (1:4).
நீண்ட ஆயுசுள்ளவர் : தானியேல் இந்தப் பெயரை வழங்குகிறான் (தானி. 7:9,13:21). உன்னதமானவர் என்ற பெயரும் வருகிறது (தானி.7:18, 21,25,27).
யேகோவா றோபா : "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்." இஸ்ரவேலின் பிரயாணத்தில் மாராவில் கசப்பான தண்ணீரை மதுரமாக்கினபோது, கர்த்தர் கொடுத்த பிரதிக்கினை இதுவே (யாத். 15:26).