யோசியா (Joshiah)
(கி.மு. 638 608)
(கர்த்தர் சீர்ப்படுத்துகிறார்)
யூதாவின் இராஜா. ஆமோனின் மகன். எட்டு வயதில் இராஜாவாகி, முப்பத்தொரு வருடம் அரசாண்டான் (2 இரா. 22:1).
இவன் தன் இராஜ்யபாரத்தின் எட்டாம் வருடம் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரெண்டாம் வருடத்தில் மேடைகள், விக்கிரகங்களை அற்றுப் போகும்படி செய்தான் (2 நாளா. 34:3). பதினெட்டாம் வருடத்தில் தேவாலயத்தைச் சுத்திகரித்தபோது, ஆசாரியனாகிய இல்க்கியா நியாயப் பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். இது உபாகமப் புத்தகமாயிருக்கலாம். அதை வாசித்தவுடனே இராஜாவுக்கும் ஜனங்களுக்கும் குற்றவுணர்ச்சி உண்டானதினிமித்தம், எல்லாரும் அதில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொள்ளும்படி உடன்படிக்கை செய்தார்கள் (2 இரா. 23:3; 2 நாளா. 34:32).
சாலொமோன் எருசலேமுக்கு எதிரே கட்டியிருந்த அருவருப்பான மேடைகளை, யோசியா தீட்டாக்கி, யெரொபெயாம் உண்டாக்கியிருந்த விக்கிரகத் தோப்புகளைச் சுட்டெரித்தான் (2 இரா. 23:13-15).
பின்பு யோசியா கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டு, அதற்கு முன்னும், பின்னும் நடவாதவிதமாய், எருசலேமில் யோசியாவின் பதினெட்டாம் வருடத்தில் இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது (2 இரா. 23:21-23, 2 நாளா. 35:1-19).
அந்நாள்களில் எகிப்தின் இராஜாவாகிய' பார்வோன் நேகோ, கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ணப் போகையில், யோசியா அவனுக்கு எதிராகப் போனான். நேகோ அவனைவேண்டிக் கொண்டபோதிலும், அவன் செவிகொடாது யுத்தஞ்செய்து, காயப்பட்டு மரித்தான் (2 இரா. 23:29; 2 நாளா. 35:20-24). ஊழியக்காரர் அவனை மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள் (2 இரா. 23:30).
யூதாவின் இராஜாக்களெல்லாருக்குள்ளும் மேலான பல பக்தியுள்ள இராஜாவுக்கு வந்த முடிவு இதுவே. அவனைப் போலொத்த இராஜா அவனுக்கு முன்னிருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதும் இல்லை (2 இரா. 23:25).
2. செப்பனியாவின் குமாரன் யோசியா (சக. 6:10).