லவோதிக்கேயா (Laodicea)
சின்ன ஆசியாவில் லீகோஸ் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு பட்டணம். இது எபேசுவிலிருந்து 40 மைல் தூரத்திலும், கொலோசேயிலிருந்து 11 மைல் தூரத்திலுமுள்ளது. இது சீரிய இராஜாவாகிய இரண்டாம் அந்தியோகு என்பவனால் கட்டப்பட்டு, அவனுடைய மனைவியாகிய 'லவோதிஸ்' என்பவளின் பேர் கொடுக்கப்பட்டது.
கி.மு. 190இல் ரோமர் இதைத் தம் வசமாக்கி, அநேக சீர்த்திருத்தங்களைச் செய்தார்கள். ரோம தேசாதிபதியின் அரண்மனை இங்கே இருந்தது. நாணயவர்த்தகமும் கம்பளி வியாபாரமும் அதிகமாய் நடந்தது.
கி.பி. 60இல் பூமி அதிர்ச்சியினால் இதற்கு அழிவு நேரிட்ட போதிலும், திரும்பவும் சீர்த்திருத்தப்பட்டது.
கிறிஸ்து மார்க்கம் இங்கே எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டதென்று, திட்டமாய்க் கூற முடியாது. எனினும் மாற்கு, தீமோத்தேயு, எப்பாப்பிரா, இங்கே போய் சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததாகத் தெரிகிறது.
பவுல், இங்கிருந்த சபைக்கு ஒரு நிருபம் எழுதி, கொலொசே சபையார் மூலம் அனுப்பினான் (கொலொ. 2:1; 4:13-16).
லவோதிக்கேயா சபை, ஆசியாவிலுள்ள ஏழு சபைகளில் ஒன்று (வெளி. 1:4; 3:14-18). இந்தச் சபையின் தூதனுக்கு எழுதின நிருபத்தில், அச்சபையார் எல்லாவற்றிலும் நிறையுள்ளவர்களென்று நினைத்ததைக் குறித்து, கடிந்து கொள்ளப்படுகிறார்கள். உலக காரியங்களில் செல்வாக்கிருந்தாலும், ஆத்ம விஷயத்தில் குறையுள்ளவர்களாயிருக்கிறார்கள். அந்தப் பட்டணத்திலிருந்த செல்வாக்குடன், கண்ணுக்குப் போடும் விசேஷ மருந்து அங்கே உண்டாக்கப்பட்டதால், “கண்ணுக்குக் கலிக்கம்" போடுவதைப் பற்றி குறித்திருக்கிறதாக எண்ணப்படுகிறது (வெளி 3:18).