லாகீஸ் (Lachish)
இது யூதாவுக்குச் சேர்ந்த ஓர் மதில் சூழ்ந்த பட்டணம். எருசலேமிலிருந்து 25 மைலுக்கப்பாலுள்ளது.அந்தக் காலத்தில் எருசலேம், மெகிதோ என்னும் பட்டணங்களைப்பார்க்கிலும் இது பெரியதாயிருந்தது.
இஸ்ரவேலருடைய சரித்திரத்தில், இதைப்பற்றி முதன் முதல் சொல்லப்பட்ட சம்பவமானது :
எருசலேம் இராஜா, லாகீஸ் இராஜாவோடு இன்னும் மூன்று இராஜாக்களைச் சேர்த்துக் கொண்டு, ஐந்து பேருமாக கிபியோன்மேல் யுத்தம்பண்ணினார்கள். யோசுவா, அதைக் கேள்விப்பட்டுப்போய், அவர்களை முறியடித்தான் (யோசுவா. 10:10). அந்த ஐந்து இராஜாக்களையும் அவன் பிடித்து, மக்கெதாவில் கொன்றுபோட்டான். லாகீஸ் பட்டணத்தைப் பிடித்து, எல்லா நரஜீவன்களையும் பட்டயக் கருக்கால் அழித்தான் (யோசுவா. 10:32). பின்பு இந்தப் பட்டணம் யூதாவுக்குக் கொடுக்கப்பட்டது (யோசுவா. 15:39).
யூதாவின் இராஜாவாகிய அமத்சியா, எருசலேமில் உண்டான கலகத்தினிமித்தம் லாகீசுக்குத் தப்பி ஓடியும் அவனைப் பிடித்து, அங்கே கொன்று போட்டார்கள் (2 இரா. 14:19; 2 நாளா. 25:27).
ரெகொபெயாம் யூதாவின் பாதுகாப்புக்காக இந்தப் பட்டணத்தைக் கட்டினான் (2 நாளா. 11:5-12). ஆனாலும் இவையெல்லாம் வீண் என்பதை மீகா தீர்க்கதரிசி குறிப்பாய்ச் சொன்னான் (மீகா. 1:13).
எசேக்கியாவின் நாள்களில், சனகெரிப் வந்து, இந்தப் பட்டணத்தைக் கைப்பற்றினதினிமித்தம் எசேக்கியா எகிப்தின் உதவியைத் தேடினான். எலியா தீர்க்கதரிசி அதினிமித்தம் அவனை எச்சரித்தான் (ஏசாயா. 20:5-6; 30:1-5; 31:1).
சனகெரிப் இந்தப் பட்டணத்தை கி.மு. 701இல் அழித்துப் போட்டதாகத் தெரிகிறது' (2 இரா. 18:13-17). ஆனால் யோயாக்கீம் நாள்களில் அதைத் திரும்புக் கட்டினார்கள்.
இந்தப் பட்டணத்துக்கு விரோதமாக நேபுகாத்நேச்சார் கி.மு.589- 587இல் யுத்தம்பண்ணினான் (எரே. 34:7) அது அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் இஸ்ரவேலர் சிறையிருப்பிலிருந்துத் திரும்பி வந்தபின் இங்கே குடியேறினார்கள் (நெகே. 11:20).