லாபான் (Laban)
இவன் பதான் அராம் ஊரான் (ஆதி. 28:5). பெத்துவேலின் மகன். ரெபெக்காளின் சகோதரன் (ஆதி. 24:29), லாபான் லேயாள், ராகேல் என்பவர்களின் தகப்பன் (ஆதி. 29:16). ஆபிரகாமும்,
லோத்தும் தங்கள் தேசத்தைவிட்டுப் போனபின், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் ஆரானில் இருந்துவிட்டார்கள். இவ்விடத்திலிருந்து ஈசாக்கும், யாக்கோபும் தங்களுக்கு மனைவிகளைத் தேடிக் கொண்டார்கள்.
ஆபிரகாமின் ஊழியக்காரன் ஈசாக்குக்குப் பெண் தேடிக் கொண்டு ஆராமுக்குப் போன பொழுது ரெபெக்காளின் சகோதரன் லாபான் முன் வந்து காரியங்களை நடத்தினான் (ஆதி. அதி.24).
யாக்கோபு ஏசாவுக்குப் பயந்து, ஆரானுக்குப் போனபோது, அவன் ராகேல் மேல் வைத்த அன்பை லாபான் அறிந்து அவனிடம் பதினான்கு வருடம் ஊழியம் வாங்கினான்.
கடைசியில் யாக்கோபு தனக்கு உண்டானவைகளெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, லாபானுக்குத் தெரியாமல், ஓடிப்போன வேளையில் லாபான் அவனைத் தொடர்ந்து போய்க் கண்டுபிடித்தான். ஆனாலும் தேவனால் எச்சரிக்கப்பட்டதினிமித்தம் ஒரு தீங்கும் செய்யாமல், யாக்கோபுடன் மிஸ்பாவில் உடன்படிக்கைபண்ணிக் கொண்டு திரும்பினான் (ஆதி. 31:22-55).
லாபானும் யாக்கோபும் ஒருவரோடொருவர் நடந்துகொண்டதைப் பார்த்தால், இருவரும் கபடுள்ளவர்கள். ஆனால் லாபான் யாக்கோபுக்கு மாமன், எஜமான். யாக்கோபு லாபானுக்கு மருமகன், ஊழியக்காரன் இருவரும் பொருளாசைக்காரர். சுய நன்மையை நோக்கினவர்கள். எப்படியாயினும் தேவனுடைய கரம் யாக்கோபின் மேலிருந்ததென்பது தெளிவாகிறது.
2. மோசே, ஜனங்களுக்குத் தன் கடைசி வார்த்தைகள் சொன்ன ஓர் இடம் (உபா.1:1).