எபூசியர் (Jebusites)
இஸ்ரவேலர் கானானுக்குப் போன நாள்களில் இந்த ஜாதியார் மலைத்தேசத்தில் வாசமாயிருந்தார்கள் (எண். 13:29). இவர்களை எருசலேமிலிருந்து துரத்திவிட யோசுவாவுக்கு கூடாமற்போயிற்று (யோசுவா 15:63; நியா. 1:21). இந்தப் பகுதி பென்யமீன் கோத்திரத்திற்குக் கொடுக்கப்பட்டது (யோசுவா. 18:28). இதிலிருந்த சீயோன் கோட்டையைத் தாவீது கைப்பற்றினபின், அதற்குத் தாவீதின் நகரமென பெயர் வந்தது (2 சாமு. 5:7). இந்தக் கோத்திரத்து ஜனத்தொகை குறைவாயிருந்ததினிமித்தமே, இஸ்ரவேலருக்கு விரோதமாயிருந்த ஜாதிகளின் பெயர் அட்டவணையில் இவர்களுடைய பேர் கடைசியாய்க் குறிக்கப்பட்டுள்ளது (யாத். 3:8; 13:5; 23:23; உபா. 7:1; 20:17).
வேதாகமத்தில் இரண்டு எபூசியரைப்பற்றி குறிப்பாய் சொல்லப் பட்டுள்ளது. (1) எருசலேம் இராஜாவாகிய அதோனிசேதேக். இவன் வேறே இராஜாக்களையும் கூட்டிக்கொண்டு கிபியோனியருக்கு விரோதமாய்ப் போனபோது யோசுவா இவர்களைத் தோற்கடித்துக் கொன்று போட்டான் (யோசுவா. 10:1,23). (2) எபூசியனாகிய அர்வனா. தாவீது இராஜா இவனிடம் ஒரு களத்தைக் கிரயத்துக்கு வாங்கி, பலிபீடங்கட்டி பலி செலுத்தினான் (2 சாமு. 24:18). பின்பு சாலொமோன் இவ்விடத்திலேயே ஆலயத்தைக் கட்டினான் (2 நாளா. 3:1).
தேசம் பிரிக்கப்பட்டபின், பென்யமீன் புத்திரர் எருசலேமிலே இருந்த எபூசியரைத் துரத்திவிடவில்லை. அவர்களும் இவர்களோடுகூட எருசலேமில் குடியிருந்தார்கள் (நியா. 1:21).