ஏவாள் (Eve)
(ஜீவனுள்ளோருக்குத் தாய்)
ஆதாமின் மனைவி. காயீன், ஆபேல், சேத் என்பவர்களின் தாய் (ஆதி 4:1). தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தபின், அவனுக்கு ஏற்ற துணை வேண்டுமென்று, ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரப்பண்ணி, அவனிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அதை மனுஷியாக உருவாக்கி, அவனிடத்தில் கொண்டு வந்தபோது, இவள் "மனுஷி” எனப்படுவாளென்று ஆதாம் சொன்னான் (ஆதி.2:18-23).
தேவன் புசிக்கக் கூடாதென்று விலக்கின மரத்தின் கனியைப் புசிக்க, சர்ப்பத்திற்கு ஏவாள் துணைக் கருவியாயிருந்ததினால், அவள் வேதனையோடு பிள்ளை பெறவும், புருஷனுக்குக் கீழ்ப் பட்டிருக்கவும் நியமிக்கப்பட்டாள் (ஆதி. 3:16).
ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் என்று சொல்லி ஆதாம் தன் மனைவிக்கு “ஏவாள்” என்று பேரிட்டான் (ஆதி. 3:20).
கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று நாம் விலகாதிருக்கும்படி, சர்ப்பம் ஏவாளை வஞ்சித்ததைப் பவுல் எடுத்துக் காட்டுகிறான் (2 கொரி.11:3).
மேலும் முதல் ஆதாம் உருவாக்கப்பட்டதினாலும், ஏவாள் வஞ்சிக்கப்பட்டு பாவத்திற்குட்பட்டதினாலும், ஸ்திரீயானவள் உபதேசம் பண்ணாமல் அமைதலாயிருக்க வேண்டுமென்றும், புருஷன் மேல் அதிகாரம் செலுத்தக்கூடாதென்றும் பவுல் கூறுகிறான் (1 தீமோ. 2:12-18).
ஸ்திரீகள் சபையில் பேசுவது அழகல்ல என்றும் பவுல் சொல்லுகிறான் (1 கொரி. 14:34,35).