கோகாத், கோகாத்தியர் (Kohath)
(ஜனக்கூட்டம்)
லேவியின் இரண்டாம் குமாரன். ஆரோன், மோசே என்பவர்களின் முற்பிதா (ஆதி. 46:11). லேவி கோத்திரம் மூன்று பகுதியானவை. கெர்சோனியர், கோகாத்தியர், மெராரியர் (எண். 3:17). கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள் (எண். 3:19).
வனாந்தரப் பிரயாணத்தில் இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தென்புறமாகப் பாளயமிறங்கினார்கள் (எண். 3:29).
அவர்களுடைய காவல், பெட்டி, மேசை, பரிசுத்த ஸ்தலத்தின் பணிமூட்டுகள் முதலியவைகளுக்கடுத்தவை (எண். 3:31). யோசுவா தேசத்தை ஜெயித்த பின் சீட்டுப்போட்டு இவர்களுக்கு 23 பட்டணங் களும் வெளி நிலங்களும் கொடுக்கப்பட்டன (யோசுவா. 21:4,5).
தாவீதின் நாள்களில் கோகாத்தியரின் குமாரரில் ஏமானும் அவன் குடும்பத்தாரும் சங்கீத சேவையில் பணிவிடை செய்தார்கள் (1 நாளா. 6:33). தாவீது லேவியரை வகுப்புகளாகப் பிரித்து ஊழியத்துக்கு நியமித்தான் (1 நாளா. 23:6,12).
மோவாபியர், யோசபாத்துக்கு விரோதமாக வந்தபோது அவன் கர்த்தரை நோக்கி தலைகுனியவே, கோகாத்தியர் கர்த்தரைத் துதித்தார்கள் (2 நாளா. 20:18,19).
எசேக்கியா தேவாலயத்தைச் சுத்திகரித்தபோது, கோகாத்தியரும் உதவி செய்தார்கள் (2 நாளா. 29:12-14).