« Back to word list

தமஸ்கு (Damascus)

இது சீரியாவிலுள்ள ஒரு விசேஷப் பட்டணம். எருசலேமைத் தவிர பூமியிலுள்ள அதிகப் பூர்வ பட்டணம். இப்போதும் ஜனங்கள் குடியேறியிருக்கிற இடம். லீபனோன் மலைத்தொடருக்கு அருகிலிருக்கும் ஒரு செழிப்பான தேசம்.

லோத்தைப் பிடித்துக்கொண்டு போனவர்களை, ஆபிரகாம் தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தினான் என்பதே இந்த இடத்தைப்பற்றி வேதாகமத்தில் முதன் முதல் குறித்துள்ளது (ஆதி. 14:15). தமஸ்கு ஊரானாகிய எலியேசர் ஆபிரகாமின் விசாரணைக்காரன் (ஆதி. 15:2). தாவீதின் நாள்களில் தமஸ்கு பட்டணத்தாராகிய சீரியர் அவனுக்கு விரோதமாக வந்தபோது, அவன் அவர்களை வெட்டிப் போட்டுத் தாணயங்களை வைத்தான் (2 சாமு. 8:6). சீரியர் தாவீதைச் சேவித்து, கப்பங் கட்டினார்கள்.

ரேசோன் சில மனுஷரைச் சேர்த்துக் கொண்டு தமஸ்குவில் இராஜாவாயிருந்து, சாலொமோனின் நாள்களிலெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாயிருந்தான் (1 இரா. 11:25). நூறு வருடங்களாய் தமஸ்குவுக்கும், இஸ்ரவேலுக்குமிடையில் யுத்தம் நடந்தது. தமஸ்குவில் இருந்த இராஜாக்களில் பெனாதாத் பேர் பெற்றவன். ஆகாப் இராஜாவின் நாள்களில் அவன் இஸ்ரவேலரை நெருக்கினான்.

ஆசா தேவாலயத்துப் பொக்கிஷங்களை எடுத்து, தமஸ்குவிலிருந்த பெனாதாத் என்னும் சீரிய இராஜாவுக்குக் கொடுத்தனுப்பினான் (1 இரா.15:18).

நாகமான் இஸ்ரவேலின் தண்ணீரைப் பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும், பர்பாரும் நல்லதல்லவா என்று சொல்லி, திரும்பிப் போனான் (2 இரா. 5:12), தமஸ்கு பாழான மண்மேடாகும்; இராஜாங்கம் தமஸ்குவையும் விட்டொழியும் என்று உரைத்தான் (ஏசாயா. 17:1,3).

தமஸ்குவுக்கு விரோதமாய் வேறு தீர்க்கதரிசிகளும், தீர்க்க தரிசனம் உரைத்தார்கள் (எரே. 49:24-27; எசே. 27:18-36; ஆமோஸ். 1:3-5, சக. 9:1).

அப்போஸ்தலனாகிய பவுலின் குணப்படுதல் தமஸ்குவுக்குச் சமீபமாய் சம்பவித்தது. பின்பு அவன் தமஸ்குவுக்குக் கொண்டு போகப்பட்டுப் பார்வை அடைந்து ஞானஸ்நானம் பெற்று ஆலயங்களில் பிரசங்கித்தான் (அப். 9:1-22). யூதர்கள் அவனைக் கொலை செய்ய ஆலோசித்தபோது, சீஷர்கள் அவனை இராத்திரியில் ஒரு கூடையில் வைத்து மதில் வழியாய் இறக்கி விட்டார்கள் (அப். 9:23-25). தமஸ்குவிலிருந்த நாள்களில் பவுல் அரபி தேசத்துக்குப் போய் சில காலம் இருந்ததாகத் தெரிகிறது (கலா. 1:17).

பவுல் தமஸ்குவில் தனக்குச் சம்பவித்ததைப் பற்றி மூன்று தடவைகளில் சாட்சியாகக் கூறியுள்ளான் (அப். 22:5-11; 26:12-20; 2 கொரி. 11:32,33).

தமஸ்குவின் தனி அதிகாரம் படிப்படியாய்க் குறைந்து போய் இறுதியில் அசீரிய இராஜ்யத்துக்குட்பட்டது.

புதிய ஏற்பாட்டுக் காலங்களில் சில காலம் தமஸ்கு அரேத்தா இராஜாவின் தலைநகரமாயிருந்தது (2 கொரி.11:32). பின்பு ரோம இராஜ்யத்துக்குக் கீழிருந்தது. (கி.மு. 64-கி.பி. 33). அராபியர் கி.பி. 634இல் அதைத் தங்கள் ஆதிக்கத்துக்குள்ளாக்கினார்கள்.

அப்படியிருக்கையில் முதலாம் உலக யுத்தத்தில், அலென்பி என்னும் பிரித்தானிய சேனாதிபதி தமஸ்குவையும் கைவசப் படுத்தினான்.

தற்காலத்தில் அது சீரிய இராஜ்யத்துக்கு தலைப் பட்டணமாயிருக்கிறது.

« Prev 314 / 564 Next »