பாலாம் (Balaam) அல்லது பிலேயாம்
(பட்சிப்போன்)
இவன் பேயோரின் குமாரன். குறி சொல்லுகிறவன் (யோசுவா. 13:22). வேதாகமத்தின் மற்ற இடங்களில் இவன் பெயர் பிலேயாம் எனப்படுகிறது (எண். 22:2-5; யூதா. 11).
இஸ்ரவேலர் பிரயாணம் பண்ணி மோவாப் தேசத்துக்கு வந்திருக்கையில் மோவாபின் மூப்பரும், மீதியானின் மூப்பரும் ஒன்று கூடி, இஸ்ரவேலரைச் சபிக்கிறதற்காக அவனுக்குக் கூலிகொடுத்து அழைத்தார்கள். தன்னை அழைக்க வந்தவர்களை பாலாம் தன்னோடு ஒரு இரவு தங்கச் செய்து, தேவனுடைய சித்தத்தை அறிந்து கொண்டு, மறுநாள் காலையிலே, தன் கழுதை மேலேறிப் போனான். வழியில் ஒரு தூதன் நிற்கிறதைக்கண்டு, கழுதை விலகிப் போனதினிமித்தம் பாலாம் கழுதையை அடித்தான். அப்பொழுது அது அவனோடு பேசிற்று (எண். 22:23-28). பின்பு பாலாம் போய் பாலாகைச் சந்தித்து, தன் வாக்கியத்தை மூன்று தடவைகளில் எடுத்துரைத்தான் (எண். 23:7-30). அவ்வேளையில் சபிக்கிறதற்குப் பதிலாக, இஸ்ரவேலரை ஆசீர்வதித்தான் (எண். 24:1-9). அதோடு "ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்", "ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்" என்றும் சொன்னான் (எண். 24:17). மேசியா வருவாரென்பதைத் தீர்க்கதரிசனமாய் உரைத்தான்.
பாலாம் சொன்ன இந்த வார்த்தையை நினைத்துக்கொள்ளும் படி, மீகாவும் சொல்லுகிறான் (மீகா. 6:5).
பிற்பாடு பிலேயாம் கொடுத்த யோசனைப்படி, மீதியானியர் இஸ்ரவேலரைப் பாவம் செய்யப்பண்ணினார்கள். இதினிமித்தம் மோசே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்து, ஐந்து இராஜாக்களைக் கொன்று, பிலேயாமையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான் (எண். 31:8,16).
புதிய ஏற்பாட்டில் இவனுடைய பொருளாசை, பாவத்தைப்பற்றி, 2 பேதுரு 2:15; யூதா. 11இல் "பிலேயாமின் வழி" என்றும், கூலிக்காகச் செய்த "வஞ்சகம்” என்றும் வேசித்தனம் பண்ண பிலேயாம் செய்த “போதகம்” என்று வெளி. 2:14லும் குறிக்கப்பட்டுள்ளது.