பாஷா (Baasha)
(தைரியம்-கி.மு.900-880)
இஸ்ரவேலின் இராஜா. இசக்கார் கோத்திரத்து அகியாவின் மகன். தாழ்ந்த நிலையிலுள்ளவன் (1 இரா. 16:1,2). இவன் யெரொபெயாமின் மகனாகிய நாதாவைக்கொன்று, தானே இராஜாவாகி, யெரொபெயாம் வீட்டாரெல்லாரையும் வெட்டிப்போட்டான் (1இரா. 15:30). பாஷா, யூதா இராஜாவாகிய ஆசாவோடு அநேக நாள்களாய் யுத்தம் செய்தான். அவன் ராமாவில் கோட்டை கட்டத் தொடங்கினபோது, சீரியா இராஜாவாகிய பெனாதாத் ஆசாவின் கேள்விப்படி அதைத் தடுத்தான் (1 இரா. 15:16-21). மேலும் அவன் இஸ்ரவேல் ஜனங்களைப் பாவம் செய்யப்பண்ணினபடியால் கர்த்தர் யெகூ தீர்க்கதரிசி மூலம் அவனுக்கு வரப்போகிற தண்டனையை அறிவித்தார். 24 வருடம் அரசாண்டு, மரித்த பின் திர்ஷாவில் அடக்கம்பண்ணப்பட்டான் (1 இரா. 16:1-6). இவனுடைய மகன் ஏலா இராஜாவானான். ஆனால் அவனையும், அவன் குடும்பத்தார் யாவரையும் சிம்ரி கொன்றான் (1 இரா. 21:22; 2 இரா. 9:9).