யோயாக்கீம் (Jehoiakim)
(கி.மு.609-598)
(கர்த்தர் நிறுத்துகிறார்)
யோசியாவின் மகன். யூதாவின் இராஜா. எகிப்து இராஜாவாகிய நேகோ பலஸ்தீனாவை முற்றுகையிட்டு யோசியா இராஜாவைக் கொன்றுபோட்டு, இவனை இராஜாவாக நியமித்தான் (2 இரா. 23:34, 36).
பின்பு பாபிலோனியருக்கும் எகிப்தியருக்குமிடையில் கார்கேமீசில் நடந்த யுத்தத்தில் (கி.மு. 604) எகிப்தியர் தோல்வியடைந்ததினால், பலஸ்தீனா பாபிலோனியருக்குக் கீழாயிற்று. நான்கு வருடங்களின் பின் யோயாக்கீம் பாபிலோனியருக்குக் கொடுத்து வந்த திறையைக் கொடாமல் விட்டதினிமித்தம், நேபுகாத்நேச்சார் யூதேயாவை முற்றுகைப் போட்டு, எருசலேமைக் கைப்பற்றினான் (கி.மு. 597) இது நடப்பதற்கு சில மாதங்களின் முன், யோயாக்கீம் இறந்து போனான். பின்பு அவன் மகன் யோயாக்கீம் இராஜாவானான்.
யோயாக்கீம் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தினால் நிரப்பினான் (2 இரா. 24:4). இவன் விஸ்தாரமான வீடுகள் கட்டத் தொடங்கி ஜனங்களைக் கொடூரமாக ஆண்டான் (எரே. 22:13-17). இவனுடைய நாள்களில் விக்கிரகாராதனையும் அருவருப்பான கிரியைகளும் நடந்தன (எசே. 8:5-17).
உரியா தீர்க்கதரிசியைப் பட்டயத்தால் வெட்டி, அவன் உடலைப் பிரேதக் குழியில் எறிந்து விட்டான் (எரே. 26:23). எரேமியா தீர்க்கதரிசி எழுதின சுருளை அக்கினியில் போட்டான் (எரே. 36:23).
எரேமியா சொன்னபடி, ஒரு கழுதைப் புதைக்கப்படுகிற வண்ணமாய் இவனுடைய சரீரம் எருசலேம் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்பட்டது (எரே. 22:19; தானி. 1:2).