யோர்தான் (Jordon)
(இறங்கிப் பாயும் ஆறு)
இது பலஸ்தீனா நாட்டிலுள்ள முக்கிய நதி. இது தெற்குப் பக்கமாக பாய்கிறது. கடல் மட்டத்திலிருந்து 230 அடி உயரத்திலுள்ள ஊலே (Huleh) என்னும் ஏரியிலிருந்து இது உற்பத்தியாகிறது.
இந்த ஆறு பத்து மைலுக்கப்பாலுள்ள திபேரியாக்கடலுக்கு வரும்போது மத்தியதரைக்கடல் மட்டத்திலிருந்து 700 அடி கீழிருக்கிறது. இங்கிருந்து 90 மைலுக்கப்பால், சாக்கடலில் விழும்போது, மத்திய தரைக்கடல் மட்டத்திலிருந்து 1292 அடி ஆழமுள்ளது.
இந்த நதியுடன் யாமேக், யாப்போக்கு என்ற இரு உப நதிகள் கிழக்கிலிருந்து வந்து சேருகின்றன. பொதுவாக இது ஒரு சிறு நதி. ஆனால் அறிப்புக் காலங்களில் கரை புரண்டு போவதுண்டு (யோசுவா. 3:15). இந்த நதியில் சிறு வெள்ளங்களே போகக்கூடியதாக இருக்கும். கலிலேயாக் கடலுக்கும் செங்கடலுக்குமிடையில், அநேக இடங்களில் இவ்வாற்றைக் கடக்கக் கூடியதாக இருந்தது. கலிலேயாக் கடலுக்குக் கீழே. இப்போது மூன்று பாலங்கள் இருக்கின்றன. எரிகோவுக்கு எதிராகவும் ஒன்று உள்ளது.
இந்நதி ஊலே ஏரியிலிருந்து உற்பத்தியாகி சவக்கடலில் விழுகிறது. இவ்விரு இடங்களுக்குமிடையிலுள்ள தூரம் 75 மைல், ஆனாலும் இந்நதி சுற்றிச் சுற்றி ஓடுவதினால் 200 மைல் நீளமுள்ளது.
கானான் தேசத்திலுள்ள எரிகோவைக் கைப்பற்றும்படி, இஸ்ரவேல் ஜனங்கள், யோசுவாவின் தலைமையின் கீழ், உலர்ந்த தரை வழியாக இவ்வாற்றைக் கடந்து போனார்கள் (யோசுவா. 3:5-17).
யாப்போக்குக்கருகே இருந்த பெனியேல் என்ற இடத்தில், யாக்கோபு ஒரு தேவ தூதனோடு போராடினான் (ஆதி. 32:22-32).
இந்த ஆற்றங்கரையிலிருந்து, எலியா சுழல் காற்றிலே பரலோகத்துக்கேறிப் போனான் (2 இரா. 2:11).
யாப்போக்கு அருகில் ஆபிரகாமும் யாக்கோபும் இந்த ஆற்றைக் கடந்தார்கள் (ஆதி. 32:10).
இவ்விடத்திலே மீதியானியர் கிதியோனுக்குத் தப்பி, ஆற்றைக் கடந்தார்கள் (நியா. 7:24; 8:4).
தாவீதும் அப்சலோமின் கலகத்தினிமித்தம் இரண்டு தடவைகளில், இதைக் கடந்து போனான் (2 சாமு. 17:22; 19:15).
யோவான்ஸ்நானனும், இவ்வாற்றில் ஞானஸ்நானம் கொடுத்தான் (மத். 3:6).
இயேசுவானவரும் சோதிக்கப்பட்டது இந்த ஆற்றங்கரையி லென்று தெரிகிறது (மத். 4:3; லூக்கா, 4:3).
யெஸ்ரயேல் பள்ளத்தாக்குக்கூடாக ஓர் உபநதி ஓடி, யோர்தானுக்குள் விழுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு யோர்தானிலிருந்து யெஸ்திராவைத் தாண்டி நாசரேத்து மட்டும் போகிறது. எருசலேமிலிருந்துச் சமாரியாவுக்குப் போகாமல், நாசரேத்துக்குப் போக விரும்புவோர், இந்த வழியாய்ப் போவதுண்டு.