ரெகொபெயாம் (Rehoboam)
சாலொமோனின் மகன். அம்மோன் ஜாதியான நாமாள் அவனுடைய தாய் (1 இரா. 14:31). அவன் இராஜாவாகிறபோது 41 வயது. பதினெழு வருடம் இராஜ்யபாரம் பண்ணினான் (2 நாளா. 12:13).
சாலொமோன் மரித்தபின், ஜனங்கள் சீகேமில் கூடி வந்து ரெகொபெயாமை இராஜாவாக்கினார்கள். ஜனங்கள் அவனுடைய தகப்பன் சாலொமோன் தங்கள் மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும்படி அவனிடம் கேட்டார்கள். அவன், தன் வாலிப சிநேகிதரின் யோசனையின்படி, அவர்களுடைய நுகத்தை அதிக பாரமாக்குவேன் என்றான் (1 இரா. 12:14; 2 நாளா. 10:1:11).
இதினிமித்தம் பத்துக் கோத்திரங்கள் பிரிந்துபோயின. யூதாவும் பென்யமீனும் அவன் பக்கமாயிருந்தார்கள்.
பின்பு ரெகொபெயாமின் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை, இஸ்ரவேலர் கல்லெறிந்து கொன்றார்கள். அப்பொழுது ரெகொபெயாம் எருசலேமுக்கு ஓடிப்போய் யூதா பென்யமீன் கோத்திரத்து ஜனங்களைக் கூட்டிக்கொண்டு இஸ்ரவேலருக்கு விரோதமாய் யுத்தஞ் செய்ய ஆயத்தமானபோது, சேமாயா தீர்க்கதரிசி அதைத் தடுத்தான் (1 இரா. 12:22-24).
ர்ெகொபெயாம் இராஜ்யத்தை திடப்படுத்திக் கொண்டு, அவனும் ஜனங்களும் வேதத்தை அசட்டை பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் நடந்ததினால், எகிப்தின் இராஜா சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து அங்கிருந்த பொக்கிஷங்களையும் பொன்பரிசைகள் முதலியவைகளையும் எடுத்துக்கொண்டு போனான் (2 நாளா. 12:9).
ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து அரணிப்பான பட்டணங்களை எடுப்பித்து, தன்னைப் பலப்படுத்தினான். ஆசாரியரும் லேவியரும் அவனிடம் வந்து சேர்ந்தார்கள் (2 நாளா. 11:5-13).
தகப்பன் செய்ததுபோல் அவனும் அநேக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் எடுத்து, ஆடம்பரமாய் ஜீவித்தான் (2 நாளா. 11:18-23).
அவன் மரித்து தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அவனுடைய மகன் அபியா இராஜாவானான் (2 நாளா. 12:16).