« Back to word list

லூக்கா (Luke)

"பிரியமான வைத்தியனாகிய லூக்கா” என்றும், 'என் உடன் வேளையாள்' என்றும் பவுல் இவனைக் குறித்துச் சொல்லுகிறான் (கொலோ. 4:14; 2 தீமோ. 4:11; பிலே. 24).

லூக்கா மூன்றாம் சுவிசேஷத்தையும், அப்போஸ்தலர் நடபடிகளையும் எழுதினான். இவைகளில் தன் பெயரை அவன் சொல்லவில்லை.

லூக்கா எழுதிய சங்கதிகளை அவன் கண்ணாரக் கண்டதாகத் தெரியவில்லை (லூக்கா. 1:2).

பவுல், கொலோ 4:14இல் லூக்காவை விருத்தசேதனம் பெற்றவர்களோடு சேர்த்தெழுதாமல், புறஜாதியாரான எப்பாப்பிரா, தோமாவோடு சேர்த்தபடியால், இவனும் ஒரு புற ஜாதியான் என்று தெரிகிறது.

துரோவா பட்டணத்தில் பவுல் இவனை முதன் முதல் சந்தித்ததாக அப். 16:10இல் "நாங்கள்” என்று சொல்லியிருக்கிறதிலிருந்து விளங்குகிறது. இவன் ஒரு கிரேக்கனும், கல்விமானுமாயிருந்தான் (லூக்கா. 1:1-4).

இவன், பிறந்த ஊர் திட்டமாய்க் குறிக்கப்படாதிருந்தும், அந்தியோகியாவில் பிறந்தானென்று எண்ணப்படுகிறது. பவுல் ரோமாபுரியில் சிறைப்பட்டிருந்தபொழுது, கொலோசெயருக்கும். பிலேமோனுக்கும் எழுதின நிருபங்களில், இவனைப் பற்றியும் குறித்திருக்கிறபடியால் இவனும் அவனோடிருந்ததாகத் தெரிகிறது.

பவுல் இரண்டாம் முறை சிறைச் சாலையிலிருந்தபோதும், லூக்கா அவனோடிருந்ததாக, கி.பி. 64இல் எழுதப்பட்ட தீமோத்தேயுவின் நிருபத்திலிருந்து அறியலாம் (2 தீமோ. 4:11). ஆகவே லூக்கா அவனுடன் கடைசி நேரம் வரை ஏறக்குறைய ஒன்பது வருட காலம் இருந்திருக்கிறான்.

இதன்பின், லூக்கா தேவ ஊழியம் செய்து வந்தானென்றும், கடைசியில் கிரேக்க தேசத்தில் தன் 84ஆம் வயதில் மரித்தான் என்றும் சொல்லப்படுகிறது.

லூக்கா, பவுலோடும், மற்ற ஊழியக்காரரோடும் ஐக்கியப்பட்டிருந்ததி னாலும், எருசலேம் செசரியா முதலிய இடங்களுக்கு போயிருந்தபடி யாலும், இயேசுவைப்பற்றியும், முதல் சீஷருடைய செய்கைகளைப் பற்றியும், நன்றாய் அறியக்கூடியதாக இருந்தது. "நாங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சங்கதிகள் ஆரம்பமுதல், கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்களிடம் பெற்ற சரித்திரம்" என்று சொல்லுகிறான் (லூக்கா. 1:2).

« Prev 553 / 564 Next »