« Back to word list

லேவியர் (Levites)

லேவியர் லேவி என்பவனின் சந்ததியார். பின்பு இவர்கள் இஸ்ரவேலருக்கு ஆசாரிய கோத்திரமானார்கள். மோசேயின் நாள்களி லேயே இவர்கள் ஆசாரிய ஊழியத்துக்கென்று தனியே பிரிக்கப் பட்டார்கள். லேவியன் என்ற பெயரே ஆசாரிய வகுப்பைக் கருதினது (நியா. 17:7).

லேவியின் இரண்டாம் புத்திரனாகிய கோகாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த மோசேயும், ஆரோனும், லேவியர் (யாத். 6:16-20)

சீனாய் மலையில், கர்த்தர் ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசாரிய ஊழியத்துக்குப் பிரிக்கும்படி, மோசேயோடு சொன்னார் (யாத். 28:1). லேவி கோத்திரத்தார் ஆரோனுக்கும் பணிவிடை செய்யும்படி நியமிக்கப்பட்டார்கள் (எண். 3:5-10).

வனாந்தரத்தில், இஸ்ரவேலர் பொன் கன்றுக்குட்டியை வணங்கின தருணத்தில், லேவியின் புத்திரர் காட்டின வைராக்கியத்தின் பயனாக, லேவிகோத்திரம் ஆசாரிய ஊழியத்துக்குத் தெரிந்தெடுக்கப்பட்டது (யாத். 32:29; எண். 3:12; 8:20-22).

குறிப்பாய்ச் சொல்லுகிறதானால் ஆசரிப்புக் கூடாரத்தின், வேலைகளைச் செய்கிறவர்களுக்கே "லேவியர்” என்று சொல்ல வேண்டும். ஆனாலும் ஆசாரிய ஊழியம் செய்த ஆரோனுடைய சந்ததியார் லேவி கோத்திரத்தாராயிருந்ததினால் அவர்களும் லேவியர் எனப்பட்டார்கள் (யோசுவா. 14:3; மல். 3:3).

தொடக்கத்தில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்தவர்கள் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதாயிருக்க வேண்டும் (எண். 4:3). பின்பு வயது 25 ஆகவும், அதின்பின் 20ஆகவும் மாற்றப்பட்டது (எண். 8:24; 1 நாளா. 23:24).

கானான் தேசம் பிரிக்கப்பட்டபோது, லேவியருக்கென்று ஒரு பங்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால் மற்ற கோத்திரங்களுக்குக் கிடைத்த தேசங்களில், பட்டணங்களும், வயல்களும், வெளி நிலங்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன (யோசுவா. 21:1-8; எண்.அதி. 35).

தாவீதின் நாள்களில் லேவியர் நான்கு வகுப்பினராய்ப் பிரிக்கப்பட்டார்கள். அவையாவன : ஆலயவேலை, விசாரிப்போர், மணியக்காரர், வாசல் காப்போர், கீத வாத்தியம் வாசித்துத் துதி செய்வோர் இந்த நான்கு வகுப்பினரும், 24 முறை வரிசையாக நிறுத்தப்பட்டார்கள் (1 நாளா. 23:3-5; எஸ்றா.6:18).

லேவியின் புத்திரர் செய்த பணிவிடை வேலைக்காக இஸ்ரவேலர் தங்களுக்குள்ள எல்லாவற்றிலும் தசம பாகம் கொடுக்கவேண்டும் (எண்.18:21).

லேவி புத்திரர் பெறும் தசம பாகங்களில், ஒரு பங்கைக் கர்த்தருக்கென்று படைத்து, ஆரோனுக்குக் கொடுக்க வேண்டும் (எண். 18:28).

பிற்காலங்களில் லேவியர் ஜனங்களுக்கு வேதத்தைப் போதிக்கவும், நியாயம் விசாரிக்கவும் ஏற்படுத்தப்பட்டார்கள் (2 நாளா. 17:8; 19:8; நெகே. 8:7).

சிறையிருப்பிலிருந்து வந்தவர்களில் லேவியரும் அநேகரிருந்தார்கள் (எஸ்றா. 2:40; நெகே. 11:15).

புதிய ஏற்பாட்டில் சொல்லப்படும் வேதபாரகரும், நியாய சாஸ்திரிகளும் லேவி கோத்திரத்தாரென்று எண்ணப்படுகிறார்கள்.

« Prev 558 / 564 Next »